2026 மே 06, புதன்கிழமை

மைய வாடிக்காணி விவகாரம்: அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு

Kanagaraj   / 2013 மே 22 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பள்ளிவாயல் மைய வாடிக்காணியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை நடாத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த காணி தொடர்பான வழக்கு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்ல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே காத்தான்குடி பொலிஸாருக்கு நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆபள்ளிவாயலுக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படும் காத்தான்குடி 6 ஆம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள மையவாடிக்காணியில் காத்தான்குடி நகர சபையினால் கட்டிடமொன்று கட்டு வதற்காக கடந்த 11 ஆம் திகதி வேலி போட்டு அடைக்க முற்பட்ட போது அங்கு கலவரம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பள்ளிவாயலின் தலைவர் உட்பட அதன் நிருவாகிகள், மற்றும் ஜமாஅத்தார்கள் உட்பட 17 சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

அவர்கள் 17 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கையும் காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன்  போது பள்ளிவாயல் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் இந்த வழக்கு தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் சுதந்திரமான பக்கசார்பற்ற விசாரணையை மேற் கொள்ள வேண்டுமெனவும் அதே போன்று இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை பொலிஸார் பதிவு செய்ய வேண்டுமெனவும் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து சுதந்திரமான விசாரணைகளை நடாத்துவதுடன் இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றும் பாதகிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடாத்தி  அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்ல்லாஹ் காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் அடுத்த மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதன் போது பள்ளிவாயல் தலைவர் உட்டப அதன் நிருவாகிகள் மற்றும் ஜமாஅத்தார் என 17 சந்தேக நபர்களும் ஆஜராகியிருந்தனர்.

சந்தேக நபர்கள் (பள்ளிவாயல் நிருவாகிகள் சார்பாக) சட்டத்தரணி கண்ணன் தலைமையிலான 6 சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகின்ர்.

காத்தான்குடி நகர சபை தலைவர் இந்த வழக்குக்கு ஆஜராக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .