2026 மே 06, புதன்கிழமை

மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது: இராணுவம்

Menaka Mookandi   / 2013 மே 29 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது என மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் சி.கோகேஸ்வரன், பி.அரியநேந்திரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறப்பினர்கள் கூட்டாக பிரிகேடியர் சுதந்த திலகரத்னவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போதே குறிப்பிட்ட பகுதியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட மாட்டாது என பிரிகேடியர் திலகரத்ன உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறப்பினர் பொன் செல்வராசா குறி;ப்பிட்டார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த பொன் செல்வராசா எம்.பி கூறுகையில், 'மட்டக்களப்பு நகரத்தின் நுழைவாயிலில் புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாம் அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் சி.கோகேஸ்பரன், பி.அரியநேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்தோம்.

மட்டக்களப்பிலுள்ள மங்களராமய விகாராதிபதி, அம்பிட்டிய சுமனரத்தின தேரர் ஆகியோர் மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறிகின்றோம். இந்த செயற்பாடானது இந்த மக்களின் சமாதனத்தையும் சகவாழ்வையும் குழப்பும் நடவடிக்கையாகும்' என்றார்.

'குறி;ப்பிட்ட இந்த பகுதியில் பிள்ளையார் இந்து ஆலயமும், மன்றேசா கத்தோலிக்க தேவாலயமும் உள்ளது. அத்தோடு தமிழர் கலாசாரத்தை கொண்ட சித்திரங்களும் வரையப்பட்டுள்ள இந்த பகுதியில் புத்தர் சிலையை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதானது சமாதானத்தை குழப்பிவிடும் செயலாகும். இந்த நடவடிக்கையினை வன்மையாக கண்டிக்கின்றோம். இது மக்களின் இயல்பு நிலையை குழப்பிவிடும் ஒரு நடவடிக்கையாகும்' என்றார்.

'இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டு அக்கடிதத்தை நாங்கள் அனுப்பியிருந்தோம். அதற்கான பதில் வருவதற்கிடையில் அவசரமாக தேரர் அவர்கள் மேற்படி புத்தர் சிலையை இன்று புதன்கிழமை இந்த இடத்தில் வைக்கவுள்ளார் என்பதை அறிந்து இதற்கு இன்று ஆட்சேபனை தெரிவித்துடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பிலுள்ள 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன ஆகியோரை சந்தித்து இது பற்றி கலந்துரையாடினோம்.

அத்தோடு மகஜர்களையும் கையளித்தோம். இதன் போது இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது என பிரிகேடியர் சுதத்த திலகரத்ன உறுதியளித்ததாக' நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .