2026 மே 06, புதன்கிழமை

'திருட்டுச் சம்பவங்களை விசாரிப்பதில் பொலிஸாரின் அசமந்தபோக்கையே காண முடிகின்றது'

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'ஆலயங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை விசாரிப்பதில்  பொலிஸாரின் அசமந்தபோக்கையே காண முடிகின்றது' என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இடம்பெறறுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் இதுவரை ஒருவரையும் கைதுசெய்யவும் இல்லை. திருடப்பட்ட பொருட்களை மீட்கவும் இல்லை' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 4 இந்து ஆலயங்களில் நேற்று முன்தினம் இடம்பெற்ற திருட்டு மற்றும் விக்கிரங்கள் சேதப்படுத்தபட்ட சம்பவங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த ஒருசில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் தங்க நகைகள், ஆலய விக்கிரகங்கள், ஆலய பொருட்கள் என்பன திருடப்படும் மற்றும் சேதப்படுத்தப்படும் நிலமை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயம், புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலயம், மிறாவோடை பத்திரகாளி அம்மன் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால், சனிக்கிழமை நள்ளிரவு குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் திருடர் குழுவினரினால் ஆலய மூல விக்கிரங்கள், இதர கருங்கல் விக்கிரங்கள் உட்பட்ட பல விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு அதன் அடியில் பதிக்கப்பட்ட வைக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தை கேள்வியுற்றதும் அவ்விடத்திற்கு சென்று நிலைமையை கண்ணுற்றபோது மிகுந்த கவலையடைந்தேன்.

கடந்த 30 வருட கால யுத்த சூழலில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை.

ஆனால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதாக அரசாங்கம் அறிவிக்கப்பட்ட பின்னரே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள்; இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அண்மைக் காலமாக ஆலயங்களில் இடம்பெற்றுவரும் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஆலய தர்மகர்;த்தா சபையினரால் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்;காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி ஆலயங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை விசாரிப்பதில் பொலிஸாரின் அசமந்த போக்கையே காணமுடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இடம்பெறறுவரும் கொள்ளைச்சம்பவம் சார்பாக பொலிஸார் இதுவரை ஒருவரையும் கைதுசெய்யவும் இல்லை. திருடப்பட்ட பொருட்களை மீட்கவும் இல்லை.

ஆலயங்களின் தங்க நகைகள் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாங்கள் தற்போது உள்ளோம். இவ்விடயமாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கதைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன்.

இச்சம்பவத்தை நான் மீண்டும் வன்மையாக கண்டிக்கின்றேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளதாவது,

'தமிழ் மக்களுக்கு பாதுகாப்பில்லை. அதேபோன்று தமிழ் மக்களின் கடவுள்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

ஒரேநாளில் மூன்று இந்து கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கு இருந்த விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டு ஆலய சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் பின்னணியை கண்டறிந்து இதை சரியாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டோரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவது பாதுகாப்புத்துறையினாரின் கடமையாகும்.

ஆலயங்கள் என்கின்றபோது அது இந்து ஆலயமாக இருக்கலாம், பௌத்த விகாரைகளாக இருக்கலாம், பள்ளிவாயல்களாகவோ அல்லது கிறிஸத்தவ தேவாலயமாகவோ இருக்கலாம்.

இவைகள் மிகவும் புனிதமான இடங்கள். இந்த இடத்தின் கௌரவத்தையும் மதிப்பையும் பார்க்காமல் இவ்வாறு ஆலயங்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பது, அதற்கு சேதம் ஏற்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.

எனவே கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலயங்களில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களை  நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இது தொடர்பில் பாதுகாப்புத்துறையினர் விசாரணை செய்து இந்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்' என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .