2026 மே 06, புதன்கிழமை

பிரான்ஸ் தூதுவர் கிழக்கு பல்கலைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 04 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன்  அம்மையார்   கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளார்.

கிழக்கு பல்லைக்கழகத்துக்கு விஜயம் செய்த கிறிஸ்ரின் ரொபிசொன்  அம்மையார், அந்தப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா, பதிவாளர் கே.மகேசன் மற்றும் பீடாதிபதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள், பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் அம்மையார் கலந்துரையாடியதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூகத்தில் உள்ள தேவைகளை நிறைவு செய்யும் வகையிலான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தூதுவர் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகின்ற மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களையும்  சந்தித்து கலந்துரையாடிய கிறிஸ்ரின் ரொபிசொன்  அம்மையார்,  மாணவர்களின் பிரச்சினைகள், தேவைகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டதாவும் அவர் கூறினார்.

அத்துடன், காத்தான்குடிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் அம்மையார், 1990ஆம் ஆண்டு படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கே விஜயம் செய்துள்ளார்.

இந்தப் பள்ளிவாசலை கிறிஸ்ரின் ரொபிசொன்  அம்மையார் பார்வையிட்டதன் பின்னர் இந்தப் பள்ளிவாசலில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் பற்றியும் கேட்டறிந்துகொண்டார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் 3.8.1990ஆம் ஆண்டு இரவுத் தொழுகையின்போது 103 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .