2026 மே 14, வியாழக்கிழமை

dd

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை வைத்திருந்த மூவர் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 04 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு நுளம்புகள் காணப்பட்டதாகக் கூறப்படும் 3 இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பாக காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 3 தினங்களாக காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பாடசாலைகள் மற்றும் பொதுஇடங்கள், வெற்றுக்காணிகள் என்பவற்றினை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் கூட்டாக  பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த பரிசோதனை நடவடிக்கையின்போது டெங்கு நுளம்புப் பெருக்கம் காணப்பட்ட, சுத்தம் செய்யப்படாத 3 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த 3 இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட தமது இடங்களை சுத்தம் செய்யாத 15 பேருக்கு அறிவுறுத்தல் கடிதங்களும்  வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து இந்த பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருதாகவும் இதற்கு பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் சம்மேளன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .