2025 மே 05, திங்கட்கிழமை

வறுமை ஒழிக்கப்பட்ட முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை மாற்றிக் காட்டுவேன்: அரசாங்க அதிபர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'எனது தலைமைத்துவத்தின் கீழே நீங்கள் என்னோடு இணைந்து ஆகக் கூடியது ஒரு மூன்று வருட காலத்திற்குப் பணி செய்வீர்களேயானால் தற்போது வறுமைக் கோட்டிலே கடைசியாக இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கையிலேயே வறுமை ஒழிக்கப்பட்ட முதலாவது மாவட்டமாக நான் மாற்றிக் காட்டுவேன் என்பதை உறுதியாகக் கூறி வைக்கின்றேன்.'

இவ்வாறு சிறந்த நிர்வாகியாக தேசிய விருதுபெற்ற மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் கூறினார்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் ஏறாவூர் நகர பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மகளிர் கை வினைத்திறன் உற்பத்திப் பொருட் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை ஏறாவூர் நகர பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடரந்தும் உரையாற்றிய அவர்,

'ஐந்தாண்டுகளுக்குள் இந்த மாவட்டத்தை எந்த விதத்திலேனும் அபிவிருத்திசெய்து இந்த மாவட்;டத்து மக்களின் பொருளாதாரத்திற்கான வாழ்வாதாரத்தையும் அவைகளுக்குரித்தான உட்கட்டமைப்பு வசதிகளையும் எவ்விதம் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பான திட்டவரைவு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே அதன் 60 வீதமான செயற்பாடுகளை நாம் முடிவுறுத்தியிருக்கின்றோம். அடுத்த 40 வீதமான செயற்பாடுகளுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் இத்தகையதொரு ஐந்தாண்டுத் திட்ட வரைவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையறிந்த பல சர்வதேச உதவி நிறுவனங்கள் தற்போது தமது நிதி வளங்களை மட்டக்களப்பு மாவட்டத்தினை நோக்கித் திருப்புவதற்குச் சம்மதித்திருக்கின்றன.

எனவே இந்த செயற்பாட்டினூடாக ஒரு பாரியளவிலான நிதி இந்த மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி வந்து சேரும். இதனூடாக மட்டக்களப்பு மாவட்டம் ஒரு நிலைபேறான அபிவிருத்தியையும் அதன் பலாபலன்களையும் விரைவில் கண்டுகொள்ளும்.

நாம் எதிர்பார்ப்பதெல்லாம் அரசாங்க உத்தியோகத்தர்களாகிய நீங்கள் சமூகத்திலே பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளீர்கள்.
எனவே அபிவிருத்தியுடன் கூடிய இந்த மாவட்ட மக்களின் பொருளாதார சமூக, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்கு அரச உத்தியோகத்தர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த மாவட்டத்தின் அரச அதிபராக நான் கடமை ஏற்ற நாளிலிருந்து இன்று வரை எனக்கு சகல அரச உத்தியோகத்தர்கள், அரசியல் தலைமைகள், மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் நகரசபைத் தவிசாளர்கள் என ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினருமே எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து எனது பணியை ஊக்குவித்துகொண்டு இருக்கின்றார்கள்.

குறிப்பாக அமைச்சர் பசீர் சேகுதாவூத், அமைச்சர் கபீர் ஹாஸிம் நான் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை நல்குகின்றார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா அவர்கள் என்னோடு எந்நேரமும் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியே தனது கரிசனையை வெளியிடுவார்.

இந்த சந்தர்ப்பத்திலே மிக உன்னிப்பாக சில விடயங்களைக் கூறியாக வேண்டும். திருகோணமலைக்குச் சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் முன்னால் பேச வேண்டிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.
அந்த நேரத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில முக்கியமான விடயங்களிலே நாங்கள் காட்டியிருக்கின்ற முன்னேற்றத்தை விசேடமாக அவர் குறிப்பிட்டுக் காட்டி இது உலகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று பாராட்டியிருந்தார்.

நமது சேவை அப்பழுக்கற்றதாக தூய்மையானதாக மக்களுக்குரியதாக இருக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் மக்களைப் புரிந்து கொள்கின்றவர்களாக இருக்க வேண்டும்.' என்றார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X