2025 மே 05, திங்கட்கிழமை

'அரசியலுக்கு அப்பால் கல்வியை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்'

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


எமது கல்வித் துறையை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லாவிட்டால் நாங்கள் தமிழீழம் பெற்றாலும் எதனையும் சாதிக்க முடியாத அல்லது அதனை நிலைநிறுத்த முடியாத சமுதாயமாக பின்தள்ளக்கூடிய நிலையே ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்துக்கு உட்பட்ட விளாவட்டவான் பொதுநூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பாக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரத்தின் (ஜனா) பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் இந்த நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

'அரசியலுக்கு அப்பால் நாங்கள் எமது கல்வித் துறையினை மேம்படுத்தக்கூடிய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வவுணதீவு பிரதேசம் கடந்த காலத்தில் பல்வேறு அழிவுகளையும் எதிர்நோக்கியது.  நாங்கள் அனைத்தையும் இழந்து இன்று எதுவும் அற்றவர்களாக உள்ளோம். நாங்கள் எங்களை நாங்களே ஆளவேண்டுமாகவிருந்தால் எமது கட்டமைப்பு மிகவும் முக்கியமானதாகும். நாங்கள் கல்வியை பலப்படுத்த வேண்டும். அந்தக் கல்வியை பலப்படுத்துவதன் மூலமே நாங்கள் எமது உரிமையை பெற்றுக்கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்த முடியும்.

எங்கள் சமூகம் ஒரு சிறந்த கல்வி கட்டமைப்பினை கொண்டிருக்கும்போதே நாங்கள் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றன. எமது சொத்துகள் பறிக்கப்படுகின்றன. எமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால் எம்மிடம் இருந்து பறிக்கமுடியாத ஒன்று இந்த கல்வி மட்டுமே. நாங்கள் அவற்றினை இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான முடிந்தளவு உதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வீதாசாரமும் குறைந்துகொண்டு செல்கின்றது. இவற்றுக்கு காரணம் எமது பின்தங்கிய பிரதேச மக்களின் கல்வி அறிவின் வீழ்ச்சியே காரணமாகவுள்ளது.

நாங்கள் அவற்றினை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாகவிருந்தால் எமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமே மேற்கொள்ள முடியும். இதற்கு அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X