2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கவும்: கல்விப் பணிமனைக்கு முன்னால் மக்கள் திரள்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வாழைச்சேனை, செம்மண்ணோடை அல்றம்றா வித்தியாலயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்குமாறு கோரி மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிமனைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை (14) காலை  திரண்டனர்.

பெற்றோர், பாதுகாவலர், பள்ளிவாசல் சம்மேளனம், பாடசாலை அபிவிருத்திச் சபை, கிராம அபிவிருத்திச் சங்கம்  ஆகியவற்றைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிமனைக்கு முன்பாக திரண்டதுடன்,  கல்விப் பணிப்பாளரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அல்ஹம்றா வித்தியாலத்தில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரினால் சமீப சில நாட்களாக அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு வந்திருந்த பெற்றோரும் பாதுகாவலரும் ஊர்ப்பிரமுகர்களும் முறைப்பாடு செய்தனர்.

இது விடயமாக தாங்கள் ஏற்கெனவே பலமுறை அறிவித்தும் கல்வி நிர்வாகம் அதில் அக்கறை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பொறுத்துக்கொள்ளாத ஆசிரியையே இவ்வாறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோருக்கும்  சக ஆசிரியர்களுக்கும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை, இந்த முரண்பாடு குறித்து உடனடியாக குறித்த பாடசாலைக்குச் சென்று சகல தரப்பினரையும் அழைத்து தீர்வுக்கு வழி காணப்போவதாகக் கூறினார்.

இதனையடுத்து ஓட்டமாவடியிலிருந்து ஏறாவூர் கல்விப் பணிமனைக்கு வந்திருந்த பெற்றோர், பாதுகாவலர், பள்ளிவாசல் சம்மேளனம், பாடசாலை அபிவிருத்திச் சபை, கிராம அபிவிருத்திச் சங்கம்  ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

இதேவேளை, கல்விப் பணிமனைக்கு முன்பாக மக்கள் திரண்டுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சி.ஆர். பீரிஸ் மற்றும் படையினரும் குறித்த இடத்திற்கு வந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X