2025 மே 03, சனிக்கிழமை

பகலுணவை பகிஷ்கரித்த பழைய மாணவர்கள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பகலுணவு வைபவமொன்றுக்கு அப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் அனுமதிக்கப்படாததால் பாடசாலையின் பழைய மாணவர்கள் பகலுணவை பகிஷ்கரித்துள்ளதுடன் தமது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இப்பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இப்பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக பகலுணவு வைபவத்தை ஞாயிற்றுக்கிழமை (27) ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக பழைய மாணவர்கள் தரிசனம் விழிப்புலனற்ற பாடசலை நிர்வாகத்திற்கு இருபாதாயிரம் ரூபாவையும் செலுத்தியிருந்தனர்.

இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்காக திருகோணமலை, பொத்துவில், அக்கறைப்பற்று, மட்டக்களப்பு, கரடியனாறு போன்ற பிரதேசங்களில் இருந்தும்; பழைய மாணவர்கள் பகலுணவு வைபவத்திற்காக வருகை தந்தபோது பாடசாலையின் பிரதான நுழைவாயில் நின்ற காவலாளி குறிப்பிட்ட ஒருமாணவரை மாத்திரம் உள்ளே அனுமதிக்கவில்லை.

இந்த மாணவரை பாசடாலை நிர்வாகம் உள்ளே அனுமதிக்க வேண்டாமென கூறியுள்ளதால் இந்த மாணவர் உள்ளே செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டதையடுத்து பகலுணவு வைபவத்திற்காக வருகை தந்த அனைத்து பழைய மாணவர்களும் பகலுணவை வைபவத்தை பகிஷ்கரித்து பாடசாலையை விட்டு வெளியேறியதுடன் தமது கண்டனத்தையும் வெளியிட்டனர்.

'நாம் பார்வையை இழந்தவர்கள.; இந்த பாடசாலையில் படித்து இன்று எங்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக பகலுணவை ஏற்பாடு செய்து அதற்கான எமது பணத்தினையும் செலுத்தி பற்றுச்சீட்டையும் பெற்றிருந்தோம். எமக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களையும் இதற்கு அழைத்திருந்தோம்.

எங்களில் சக மாணவர் ஒருவரை உள்ளே அனுமதிக்க நிர்வாகம் மறுத்ததால் நாங்கள் இதை பகிஷ்கரித்து வெளியேறியுள்ளோம். இதற்காக எமது கண்டனங்களை தெரிவிக்கின்றோம்' என மாணவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவர் ஏ.ரவீந்நதிரனிடம் கேட்டபோது, 'கடந்த வருடம் இந்த பாடசாலையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பில் ஒரு சில மாணவர்களை இப்பாடசாலைக்குள் அனுமதிப்பதில்லை என நிர்வாகம் கண்டிப்பாக முடிவு செய்துள்ளதால் அதன் பிரகாரம் இந்த வைபவத்திற்காக வருகை தந்த அந்த மாணவர் அனுதிக்கப்படவில்லை. எனினும் மனிதாபிமான ரீதியாக அந்த மாணவரையும் இணைத்துகொண்டோம்' இது எனது தனிப்பட்ட நடவடிக்கையாகும் என இதன்போது அவர் தெரிவித்தார்.

எனினும் இந்த மாணவர்கள் முற்றாக பகிஷ்கரித்ததுடன் விழிப்புலனற்ற மாணவர்களுக்காக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் விடுதியில் தங்குவதற்கு இதன் பழைய மாணவர்கள் வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் இதன்போது முன்வைத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X