2025 மே 01, வியாழக்கிழமை

'கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த அனைவரும் முன்வர வேண்டும்';

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

குறுகிய அரசியல் இலாபத்தை  ஒதுக்கிவிட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு இல்லாவிடின் ஏனைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முட்டுக்கட்டையாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்;புத் தெரிவித்து முட்டுக்கட்டையாக இருப்பதை ஆட்சேபித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கல்முனை பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கை இன விரிசல்களுக்கு வழிகுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்வதோடு, எவ்விதத்திலும் எதிர்ப்புக்காட்டக் கூடாது என்பதுடன் தடையாகவும் இருக்கக்கூடாது.

இப்பிரதேச செயலகப் பிரச்சினை என்பது புதிதாக தோன்றிய பிரச்சினை அல்ல. இது 30 வருடகாலமாக இருந்து வருகின்ற பிரச்சினையாகும். கல்முனை மாநகரம் தமிழர்களின் பூர்விக இடமாகும். இதனை எவரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. எனவே கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது காலத்தின் தேவை. இதனை பிழையெனக் கருதி தடைவிதிப்பது பொருத்தமற்றது. எதிர்காலத்தில் இன விரிசலினை அப்பிரதேசத்தில் ஏற்படுத்தும் என்பதனை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

2008ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கான தனியான நிலத் தொடர்பற்ற கல்வி வலயமான மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அமைக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவித எதிர்ப்பினையும் தெரிவித்துக்கொள்ளவில்லை என்பதனை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இதற்கான எதிர்ப்;பினை நாங்கள் தெரிவித்திருந்தால்  அவ்வலயத்தினை அமைத்திருக்க முடியுமா? இன்று அவ்வலயம் இலங்கையில் முதல் நிலைக்கு வந்திருக்குமா? என்பதனை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

எனவேதான் இதனை முன் உதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும். ஆளும் கட்சியுடன் இருந்தால் எவற்றினையும் செய்து முடிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் செயற்படுவதனை கைவிட வேண்டும். நாங்களும் குறுகிய அரசியல் செய்ய வெளிக்கிட்டால் நிலைமை தலைகீழாக மாறும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

எனவேதான் இவ்வாறான இன விரிசலினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கைவிட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கல்முனை பிரதேச செயலகத்தை  தரம் உயர்த்துவதற்காக முன்வர வேனண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .