2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிழக்கு முதலமைச்சர் சிங்கள மொழி மூலம் பணிப்பு: ஆசிரியர் சங்கம் கவலை

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் ஆங்கில மொழி மூல அறிவுறுத்தலுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிங்கள மொழி மூலம் பணிப்புரை வழங்கியிருப்பது சிறுபான்மை இனத்தின் மொழிக் கொள்கையை மீறும் செயலாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சரால் கல்குடா வலய கல்விப் பணிப்பாளருக்கே சிங்கள மொழி மூலமான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை கண்டித்துள்ளது.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பளருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிங்கள மொழி மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதைச் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ. உதயரூபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசிரியரொருவரின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் ஆங்கில மொழிமூல அறிவுறுத்தல்களுக்கு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளருக்கு சிங்கள மொழிமூலம் பணிப்புரையை வழங்கியிருப்பது இலங்கை சனநாயக சோசலிசகுடியரசின் தாபன மற்றும் சட்டவாட்சிக்கு முரணானதாகும்.
 
சிறுபான்மை இன சுயநிர்ணய கோட்பாட்டையும் 13 ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டத்தையும் அங்கீகரித்துள்ள சங்கம் 2009.09.25ஆம் திகதிய 1620/27 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மற்றும் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 7/2007 (i).2010.09.30 ம் திகதி 1651/20 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி 1980.06.11அன்று இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதஉரிமை பிரகடனத்தின் உறுப்புரை (ஐ), உறுப்புரை (ஐஐ), இன் குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயங்களின் சட்ட கோட்பாடுகளை மீறுவதாக இச் சிங்கள மொழி மூல அறிவுறுத்தல் காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் அரச கடிதங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலே அனுப்பப்படுவதையிட்டு இலங்கை ஆசிரியர் சங்கம் மகிழ்ச்சியடைகிறது.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தெளிவாக்கப்பட்டுள்ள மொழிக் கொள்கையை கிழக்கு மாகாண முதலமைச்சர் கவனத்தில் கொள்ளாதது கவலையளிக்கிறது. மனித உரிமைகளை மேம்படுத்தலும், பாதுகாத்தலும் என்பது அரசியலமைப்பு நாடு தன்னார்வத்துடன் பொறுப்பேற்றுக் கொண்ட சமவாயங்கள் கடப்பாடுகள் என்பவற்றின் குறித்த ஏற்பாடுகளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.
 
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் ஓர் அடிப்படை கடப்பாடகவும் அமைகின்றது என்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் கருத்திற்கொள்ள வேண்டும்" என அந்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • aj Thursday, 19 December 2013 10:53 AM

    இவரை சொல்லி குற்றம் இல்லை. இவரை தெரிவு செய்த மக்களை தான் குற்றம் சொல்ல வேண்டும். இவர் வாய் திறந்து பேசுவதே பெரிய விடயம் அதிலும் இப்படி... மானம் கெட்ட பிழைப்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .