2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யானை வேலி அமைப்பதில் சர்ச்சை: இரா.துரைரெட்ணம்

Super User   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

அம்பாறை மாவட்டத்துக்கான யானை வேலியை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அமைக்கும் நடவடிக்கையினை உடனடியாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை கிராம சேவையாளர் பிரிவுக்குள்ளே இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த வன ஜீவராசி திணைக்களம், ஊர்காவல் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினரின் கவனத்துக்கு அப்பிரதேச மக்கள் கொண்டுவந்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற மாகாண சபை உறுப்பினர் யானை வேலி அமைக்கும் பகுதிகளுக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன் பின்னர் இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"திங்கட்கிழமை காலை பட்டிப்பளை பிரதேச செயலத்துக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களினால் வேலிகள் அமைக்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு சென்றேன். அங்கு அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள், ஊர்காவல் படையினர், இராணுவத்தினர் இணைந்து யானை வேலி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய பகுதியை உள்ளடக்கியதாக இந்த வேலிகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 17ஆம் கட்டையில் இருந்து கச்சக்கொடி சுவாமிமலையில் உள்ள விகாரை வரையில் இந்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் இப்பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்களின் ஒப்பங்கள் உள்ள சுமார் 800 ஏக்கர் காணிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்படுகின்றன.

உண்மையில் அம்பாறை மாவட்டத்துக்கான யானை வேலி அமைக்கப்பட வேண்டுமானால் பதுளை சந்தியில் இருந்து மயானம் வரையான பகுதி மட்டுமே அம்பாறை மாவட்டத்துக்குரிய பகுதியாகவுள்ளது. ஆனால் அதனையும் தாண்டி எழுந்தமானமாக இந்த யாiனை வேலிகள் அமைக்கப்படுகின்றன.

இது தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசென்றேன்.
யானை வேலிகள் அமைப்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகளை தங்கள் வசப்படுத்துவதற்கான சதி முயற்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. இந்த சதி முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

தமிழர்களுக்குரிய ஒப்பக் காணிகளை அபகரித்து தங்களதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருவது தொடர்பில் கடும் கண்டனத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .