2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சட்டங்களை மீறவே அனேகமானோர் முயல்கின்றனர்: பி.எஸ்எம்.சார்ள்ஸ்

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


'சட்டவாக்கங்கள் மனிதன் தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டாலும், அந்தச் சட்டங்களை எவ்வாறு மீறுவது என்பதிலேயே அனேகமானோர் கூடியவரையில் முயல்கிறார்கள்' என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

8 ஆவது தேசிய பாதுகாப்பு தின மாவட்ட நிகழ்வு மாவட்ட செயலக முன்றலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடரந்தும் உரையாற்றிய அவர்,

'மட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறு அனர்த்தங்களை எதிர்கொள்ளும் மாவட்டமாகும். அனர்த்தங்கள், வறியவர்கள், வசதிபடைத்தவர்கள் என்று பார்ப்பதில்லை. அந்த வகையில் அனர்த்தங்களால் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
அனர்த்தங்கள் வறிய நாடுகள், வளமுள்ள நாடுகள் என்று பார்ப்பதில்லை. கிறிஸ்மஸ் நாளில் கனடாவில் வீட்டைவிட்டு வெளியில்
செல்லமுடியாதளவுக்கு பனிப் பொழிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது.

அந்த வகையில் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வததே அவசியமாகும். அனர்த்தங்களிலிருந்து மீட்டல், அதிலிருந்து பாதுகாத்தல், குறைத்தல் தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் சட்டரீதியாக தொடர்புடையவர்கள்;, அமைப்புக்கள் மனிதனுடைய பாதுகாப்பு ரீதியான விடயங்களை முன்னிறுத்தி செயற்பட வேண்டும்.

மனிதன் தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்வதற்காகக் கட்டமைக்கப்பட்டவையே சட்டவாக்கங்களாகும். இப்போது சட்டத்தை எவ்வாறு மீறுவது என்பதைப்பற்றித்தான் யோசிக்கிறார்கள். கரையோரங்களில் கட்டடங்கள் அமைக்கப்படுதல், சிறிய குளங்களை அழித்து வயல்நிலங்களாக்குதல் எனப் பல விடயங்கள் உதாரணங்களாகக் கூறலாம்.

சட்டங்களின் வரையறைகளையும், அதன் ஒழுங்குகளினையே சுமந்து கொண்டிருக்கும் நாம், உரு வகையில் அந்தவிதமானவற்றுக்கு உதவி புரிபவர்களாக இருக்கிறோம். அந்த வகையில் சமூகத்தின் பாதிப்புக்களுக்கு நாம் ஒரு காரணமாக இருக்கிறோம்.

அனர்த்தங்களின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கு மக்கள் சுதாரித்துக் கொண்டாலும் அதன் உட் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கே அதிகம் காலம் தேவைப்படுகிறது. பிரதேச செயலாளர்கள், ஏனையவர்களிடமிருந்தும் தற்போது யானைப்பாதிப்பு தொடர்பில் அறிவித்தல்கள் வருகின்றன.

யானைகளில் இருந்து பாதுகாப்புக்காக வேலிகளை அமைத்தோம். அண்மையில் ஐந்து பேர் வரை உயிரிழந்தும் உள்ளனர். ஆனால் வனவிலங்குபரிபாலன அதிகாரிகளது தகவல்களின் படி யானைகள் உள்ள கடும் காட்டுப் பகுதிக்குள் செல்வதும், வேலிகளைச் சேதப்படுத்துவதுமே யானைகளால் ஏற்படும் அழிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.  புல்லுமலையில் நான் பயணம் செய்து கொண்டிருக்கையில் புல் பற்றவைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சேர்ந்து யானைப் பாதுகாப்பு வேலியும் எரிந்து கொண்டிருக்கிறது. நாம் நம்முடைய பாதுகாப்பு, நம்முடைய தேவைக்கான விடங்களில் அக்கறையில்லாதவர்களாக இருக்கிறேம் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

பூகோள ரீதியான மாற்றங்கள் நாடுகளையே இல்லாமல் செய்யும் அளவுக்கான நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. மாலைதீவு அதற்கு உதாரணமாகும். மட்டக்களப்பானது மட்டமான களப்புகளையுடைய பிரதேசமாகும். கடல் மட்டம் உயரும் போது அதிக பாதிப்புக்களை எதிர்கொள்கிறது.

அனர்த்தங்களை நினைவு கூருவதற்காக 10 அல்லது 15 நிதிடங்கள் செலவு செய்வதாக இல்லாமல் இதனை ஞாபகத்தில் வைத்து செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் இலங்கை மக்களைப்பற்றி கூறுகையில் அதிகம் ஞாபக மறதி இல்லாதவர்கள் என்று தெரிவிக்கின்றனர். இவை அபிவிருத்தி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கும் தேவையாகும்.

பல்வேறு திட்டங்கள் அனர்த்தப்பாதுகாப்பு, அனர்த்த பாதிப்புக் குறைப்புகளுக்காக செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இவற்றுக்குள் மக்களின் விழிப்புணர்வும் தேவையாக இருக்கிறது.

அனர்த்தங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதல்ல. இலங்கையைப் பொறுத்தவரையில் எரிமலைக்குழுறல் போன்ற பெரிய அனர்த்தங்களை எதிர் கொள்வதல்ல. வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களையே எதிர் கொள்கிறது, எனவே முழுமையான அனர்த்தம் தொடர்பான அறிவுடனும், ஒத்துழைப்புடனும் செயற்படும் போது அதன் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். அதற்கு உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் மன இசைவுடன் செயற்பட வேண்டும்.

இப்போது நிரந்தர நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் மாவட்டத்தினதும் மக்களதும் தேவைகளை நிறைவே;றுவதற்காகவும் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் வகையில் செயற்பட வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .