2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முன்பள்ளிகளை அதிகரிக்க வேண்டுமே தவிர, அவற்றினை மூட இடமளிக்கக்கூடாது: யோகேஸ்வரி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கல்குடா கல்வி வலயத்தில் 96 முன்பள்ளிகள் உள்ளன. முன்பள்ளிகளை அதிகரிக்க வேண்டுமே தவிர, இருக்கும் முன்பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கக் கூடாது என கல்குடா கல்வி வலய ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் கோபாலரெட்ணம் யோகேஸ்வரி தெரிவித்தார்.

ஸ்ரீரமண மகரிஷி முன்பள்ளிப் பாடசாலையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற  பெற்றோர்கள் மற்றும் சமூகநலன் விரும்பிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீரமண மகரிஷி முன்பள்ளிப் பாடசாலைகளின் ஸ்தாபகத் தலைவர் எம்.செல்லத்துரை தலைமையில் கிரான் ஸ்ரீரமண மகரிஷி முன்பள்ளிப் பாடசாலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி  முரளிதரனின் இணைப்புச் செயலாளர் எம்.பேரின்பமலர், ஸ்ரீரமண மகரிஷி அமைப்பின் செயலாளர் ஜே.யோகராஜா, கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் குமாரசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கல்குடா கல்வி வலயமும் இந்த வகையில் முன்பள்ளிகளை முன்னுக்குக் கொண்டு வருவதற்குத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.
புதிய கிராமங்களிலும் மீள்குடியேற்றப் பகுதிகளில் உள்ள சிறார்களுக்காக புதிய முன்பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும். அந்தந்த கிராமத்திலுள்ள பாலர்கள் அந்த ஊருக்குள்ளேயே உள்ள முன்பள்ளிகளில்தான் தமது பாலர் விருத்திச் செயற்பாடுகளைத் ஆரம்பிக்க வேண்டும்.
இப்போதைய சூழ்நிலையில் பெற்றோரை ஒருவகையான போலி மோகம் ஆட்கொண்டுள்ளது. அதாவது கல்வியில், அறிவுசார் விடயங்களில் தம்பிள்ளைகளுக்கு இருக்கும் போட்டிக்குப் பதிலாக பெற்றோரே போட்டியிடுகின்றார்கள்.

பரீட்சைகள், நிகழ்வுகள் எதனை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்குப் பதிலாக பெற்றோரே மறைமுகப் போட்டியில் இறங்கி விடுகின்றார்கள். இது கடைசியில் பகைமை உணர்வைத் தூண்டியும் விடுகின்றது.

பெருமைக்காக அதிகளவு பணத்தை வாரியிறைக்கின்றார்கள். பகட்டுக்காக பணம் அறவிடும் கல்வி நிலையங்களில் சேர்ப்பிக்கின்றார்கள்.
பிள்ளைகளை அறிவார்ந்த ரீதியில் தற்போதைய பெற்றோர் மோத விடுவதில்லை. பிள்ளைகளை தம் போலிக் கௌரவத்துக்காக தயார்படுத்துவதை விட்டு விட்டு அறிவாற்றலைத் தேடிக்கொள்வதற்காக அவர்களுக்கு சுயசிந்தனை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு எதனையும் திணிக்கக்கூடாது. ஒரு பிள்ளை சுயசிந்தனை ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு தூண்டும் பெற்றோரே சிறந்த பெற்றோராக இருக்க முடியும்.

ஆரம்பக் கல்வியில் முதலில் ஒரு பிள்ளை குடும்ப உறவிலிருந்து வெளிப்பட்டு வெளியுலகத்தோடு தொடர்பு கொள்வதற்காக சகபாடிகளுடன் உறவாடக் கற்றுக் கொள்கின்றது. விளையாட்டோடு சேர்த்து தமது  வெளியுலகத்தைக் கண்டுபிடிக்கும் இடம்தான் முன்பள்ளிகள்.
மாறாக இது பாடம் நடத்திப் பரீட்சை எழுதும் இடமல்ல. ஐந்து வயதுப் பிள்ளைக்குத்தான் எழுத்துப் பழக்க வேண்டும். அதுவும் அச்சுறுத்தி தண்டனை வழங்கி கற்பித்துக் கொடுக்க முடியாது. பிள்ளைகளை வற்புறுத்தினால் அவர்கள் முன்பள்ளியிலேயே கல்வியை வெறுக்கத் தொடங்கி  விடுவார்கள்.

பெரும்பாலும் தாய்மார்களே இத்தகைய பகட்டு விடயங்களில் தங்களது பிள்ளைகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றார்கள். இதனால் பிள்ளைகளின் மன நிலை ஆரம்பத்திலேயே இடருக்குள்ளாகின்றது.

பொதுவாக மாணவர்கள் குறைவாக இருக்கின்ற முன்பள்ளிகளில் பிள்ளைகளைப் பற்றிய கவனிப்பும் கரிசனையும் கூடுதலாக இருக்கும் என்பதை பெற்றோர் கவனத்திற்கொள்ள வேண்டும்.

முன்பள்ளிகளுக்குரிய இயற்கைச் சூழல், காற்றோட்டம் என்பன இதமானதாக இருக்க வேண்டும். இருட்டறை போன்ற சூழலில் உள்ள முன்பள்ளிகளில் பிள்ளைகளை கொண்டு போய்ச் சேர்க்கக்கூடாது.

முன்பள்ளிகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் எவ்வாறான சூழலில் அது அமைந்திருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் நாம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கருத்தரங்குகள் மூலம் தெளிவுபடுத்தி வருகின்றோம்.' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .