2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கராத்தே கலையினூடாக மாற்ற முடியும்: சாள்ஸ்

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'யுத்தத்தின் பிடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் சூழலில், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை 'கராத்தே' கலைகளின் ஊடாக மாற்றமுடியும். இதன் மூலம் வளமுள்ள இளைஞர் சமுதாயம் உருவாக்கப்படவேண்டும்'  என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, சோட்டோ கான் கழகத்தின் ஏற்பாட்டில்  திங்கட்கிழமை (30) மட்டக்களப்பில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான கௌரவிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பெண்களும் சிறுவர்களும் பல இன்னல்களுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்து வருகிறார்கள். பொதுவாக பாடசாலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும், தங்களது திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்கு பல சவால்கள் உள்ளன. இவ்வாறான சூழலில் தற்காப்புக் கலைகளால் தன்நம்பிக்கைகளும், முயற்சிகளும் மேம்பட்டு வருகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலில் இளைய சமூகத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும், வன்முறைகளை மேற்கொள்பவர்களாகவும் மாறிவருகின்றனர். இவர்களை வழிப்படுத்துவதற்கு தற்காப்புக் கலைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தல் திட்டத்தின்; கீழ் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு பல மில்லியன் பணம் செலவிடப்பட்டுள்ளது. முதல் நாள் நன்றாக இருக்கும் இடங்கள் மறுநாள் காலையில் பார்க்கையில் மின்விளக்குகள் சேதப்படுத்தப்பட்டும், பொருள்கள் உடைக்கப்பட்டும் காணப்படுகின்றன.

மட்டக்களப்பில் புதிதாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படும்;போது அவை சேதமாக்கப்படுகின்றன.

குறிப்பாக காந்திப்பூங்கா அதன் சுற்றுச்சூழல் மக்களின் அமைதி பகுதியாக இருக்கின்றது. ஆனால் அங்கு இரவு வேளையில் கூடும் இளைஞர்கள் அங்கு வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலவேளைகளில் காலையில் ஊழியர்கள் சென்று பார்க்கும்போது அங்குள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டு  காணப்படுகின்றன. நாங்கள் இது தொடர்பில் சிந்திக்கவேண்டும்.

எமது சொத்துக்களை நாங்களே இல்லாமல் செய்யும் நிலையை தடுக்க அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டும். தவறான செயற்பாடுகள் மேற்கொள்வோர் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும்.

இவ்வாறானவர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கடப்பாடு மட்டக்களப்பு சோட்டோகான் கழகம் போன்ற அமைப்புகளுக்கு உண்டு. இக்கழகம் இவ்வாறான சேவையைச் செய்து வருவதையிட்டு வாழ்த்த விரும்புகிறேன்.

யுத்தத்தின் பிடியில் இருந்து மீண்டு வரும் சூழலில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இவ்வாறான கராத்தே கலைகளின் ஊடாக மாற்றமுடியும். இதன்மூலம் வளமுள்ள இளைஞர் சமுதாயம் உருவாக்கப்படவேண்டும். அதனை தொடர்ந்து இக்கழகம் செய்யவேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .