2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும்: சார்ள்ஸ்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவியளித்து அவர்களை கல்வியில் மேம்படுத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

புத்தாண்டு விழாவையொட்டி காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்திப் பயனாளிகள் குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று புதன்கிழமை (1)  அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு சவால்கள் நமக்கு இருக்கின்றன.  இவற்றில்  ஒன்று வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மக்களை அதிலிருந்து மீட்பதற்காக வாழ்வாதார உதவிகளை அவர்களுக்கு வழங்கி பொருளாதார ரீதியாக அவர்களை மேம்படுத்துவது,  இரண்டாவது பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு உதவியளித்து அவர்களை கல்விப் பொதுத்தராதர உயர்தரம்வரை செல்வதற்கு வழிகாட்டி அவர்களை நெறிப்படுத்துவது. இந்த இரண்டு விடயங்களையும் மேற்கொள்வதற்கு இந்த மாவட்டத்திலுள்ள அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் முகமாகவே  கடந்த வாணி விழாவை  மேற்கொண்டோக்ம்.

இதேபோன்று, இந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டு விழாவையும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விக்கு உதவும் விழாவாக மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், சமய சமூக நிறுவனங்கள், அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் தமது கல்வி நடவடிக்கையை இடைநடுவில் நிறுத்தி விடுகின்றனர்.

இதில் சில மாணவர்கள் ஐந்தாம் ஆண்டுடனும் இன்னும் சில மாணவர்கள் பத்தாம் ஆண்டுடனும் இன்னும் சில மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதரணதரம், கல்விப் பொதுத்தராதர உயர்தரம் என்பவற்றோடு கல்வி நடவடிக்கையை நிறுத்தி விடுகின்றனர். இதனால் இந்த மாவட்டத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த முடியாது.

இதில் பெற்றோரும் ஏனையோரும் விழிப்புடன் செயற்பட்டு மாவட்டத்திலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்த வேண்டும்.
இதற்காக இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .