2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முஸ்லிம்களை அடக்கி ஆள த.தே.கூ நினைக்கக்கூடாது: சிப்லி

Super User   / 2014 ஜனவரி 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும், சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஆள நினைக்கக்கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதை கண்டிப்பதாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை முஸ்லிம் சமூகத்தை வேதனைப்பட வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக ஊடகங்களில் பார்த்து வேதனை அடைந்தேன்.

இதனை நோக்குகின்ற போது இந்த நாட்டின் சிறுபான்மையினராகவும் மொத்த சனத்தொகையில் 35 சதவீதத்திற்கு மேல் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது நாட்டின் இன்னுமோர் சிறுபான்மை இனத்தை பிரதி;நிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற இனத்துவேசத்தையும் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஆளப்பட வேண்டும் என்கின்ற கருத்துக்கு தூபமிடுவதை போன்ற ஓர் செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

மாகாண சபை முறைமை 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரையிலான காலப் பகுதயில் உள்ளுராட்சி ஆணையாளர்களாக பரமேஸ்வரன், சதாட்சத சண்முகதாஸ், சுந்தரம் திவகலாலா, சபாவதிப்பிள்ளை, பாலசிங்கம், தயாபரன மற்றும் உதயகுமார் என்று தமிழ்; இனத்தைச் சேர்ந்த  உள்ளுராட்சி ஆணையாளர்கள் இருந்தனர்.

இதன்போது எந்தவோர் நேரத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகளோ முஸ்லிம் தலைவர்களோ இவர்களுக்கு எதிராகவோ இவர்களின் நியமனத்திற்கு எதிராகவோ ஒருபோதும் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கவில்லை.  இந்த நிலையில் 22 வருட நிருவாகத்துறை அனுபவத்தைக் கொண்ட அதிலும் உதவி உள்ளூராட்சி ஆணையாளராக 15 வருடங்களும் கல்முனை மாநகர ஆணையாளராக 06 வருடங்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக 02 வருட அனுபவத்தைக்கொண்ட எம்.வை.சலீம், திறமை அடிப்படையிலும் அனுபவ ரீதியிலும் மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது ஓர் வெட்கப்படவேண்டிய செயலாகும்.

சமூகங்களை பிரித்தாளுவதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்ற ஈனச்செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது. முஸ்லிம்கள் இதை திரும்பிப் பார்க்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி அரசாங்க அதிபர் என்பது முஸ்லிம்களுக்குரிய ஓர் ஆசனமாக இருக்கையில் 21 வருடங்களுக்கு முன்பு புலிப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வை.அகமத்திற்கு பின்பு இதுவரை முஸ்லிம்களுக்குரிய அந்த ஆசனம் தமிழர்களால் தான் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமியுங்கள் என எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் கோரவில்லை. சமத்துவம், விட்டுக்கொடுப்பு, இன ஒற்றுமை பற்றி பேசுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய சுயரூபத்தை வெளிக்காட்டுகின்ற இந்த ஈனச்செயலை கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும், சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னுமொரு சிறுபான்மை சமூகத்தினை அடக்கி ஆள வேண்டும், அடிமைகள் போல் நடாத்த வேண்டும் என எதிர்பார்க்கின்ற ஓர் கேவலமான சிந்தனையை இவர்கள் முற்றாக மாற்ற வேண்டும்.

தமிழ் மக்களால் தன்னிகரில்லா தலைவர் என அழைக்கப்படும் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பெரும்பான்மை இனத்திடமிருந்து சிறுபான்மை இனத்திற்கு கிடைக்க வேண்டிய சம பிரதிநிதித்துவம் ஐம்பதுக்கு ஐம்பது (50:50) என்ற வாதத்தை முன்வைத்து போராடினார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ நுற்றுக்கு பூச்சியம் (100:00)என்கின்ற வாதத்தில் முஸ்லிம்களுடைய அனைத்து விடயங்களையும் அடக்குவதற்கும் முடக்குவதற்கும் செயற்படுகின்றார்கள் என்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கை ஓர் பெரிய சான்றாக அமைகின்றது.

முஸ்லிம் காங்கிரஸினை கிழக்கில் ஆட்சியமைப்பதற்காக முதலமைச்சரை விட்டுத்தருகின்றோம் என்று பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான ஓர் கபட நாடகத்தை ஆடியிருக்கின்றது என்பது இங்கு தெளிவாகின்றது. திறமை அடிப்படையிலும் அனுபவ அடிப்படையிலும் கிடைக்கப் பெறுகின்ற ஓர் அரச நியமனத்தைக்கூட கொடுக்கக்கூடாது என்று சொல்லுகின்ற இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாசைகளையும் நியாயமான வளப் பங்கீடுகளையும் அதிகாரங்களையும் கூட்டாற்சியின் மூலம் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்;போகின்றது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அரச காணி என்ற ஓர் பூதாகரத்தை உருவாக்கி முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் இருந்து அவர்களை துரத்தி ஓர் சிறிய எல்லைக்குள் அடிமைகள் போல் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் அரச நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்றோர் முயலுகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்;கின்ற போது வடக்கில் இருந்து புலிகள் ஆயத முனையில் முஸ்லிம்கள் அனைவரையம் துரத்தியது போன்று அரச நிருவாகத்தின் ஊடாகவும் அரசியல் அதிகாரத்தின் ஊடாகவும் கிழக்கு முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குகின்ற ஓர் நிகழ்ச்சி நிரலின் அங்கமாகவே உள்ளூராட்சி ஆணையாளர் நியமனத்திற்கு எதிராக இந்தக் கோசத்தை பார்க்க முடிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தனியார் காணிகள் அரசாங்கம் வழங்கும் சலுகைகள் உரிமைகள் அபிவிருத்திகள் அனைத்தும் கிழக்கில் வாழ்கின்ற 40 வீதத்திற்கு குறைவான தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தம் என நினைக்கின்ற மிகக்குறுகிய மனம் படைத்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள 60 வீதத்திற்கு அதிகமான முஸ்லிம் சிங்கள மக்களின் உரிமைகளை மறுக்கின்றது.

இவ்வாறான எண்ணப்பாடுகள் ஓர் சுமூகமான உறவை இல்லாமல் செய்வதற்கும் மீண்டும் ஒரு இனங்களுக்கிடையிலான பிரச்சினையை உருவாக்குவதற்கான நடவடிக்கையாகவே இதை பார்க்க வேண்டும். பிளவு பட்டுக்கொண்டும் சுயநலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை எல்லாம் ஒன்றுபடுங்கள் என்றும் பிரிந்து கிடக்கும் முஸ்லிம் சமூகம் தமது அரசியல் இருப்புக்களை உறுதிப்படுத்துவதற்கு முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகத்திற்கு இதன் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொல்லும் செய்தியாகும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .