.jpg)
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு பகுதியில் கழிவு நீரை பொது வடிகானினுள் விட்டு, மாநகர சபையின் சுகாதார விதியை மீறியமைக்காக கடை உரிமையாளர் இருவருக்கு எதிராக பொலிஸார் இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மழை காலங்களில் பரவும் டெங்கு மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு நகரில் பிரதான வீதிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள், மாநகரசபையினால் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தலைமையில் மாநகர சபை ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நீர் தேங்கி நிற்கும் வடிகான்கள் சீர் செய்ததோடு நீர் நிறைந்து நிற்கும் குழிகளும் மூடப்பட்டு துப்பரவு செய்யப்பட்டதோடு வீதியின் அருகில் வளர்ந்துள்ள புல் பூண்டுகளும் அகற்றப்பட்டன.
மகாத்மா காந்தி பூங்காவில் ஆரம்பமான இவ்வேலைத்திட்டம் சென்றல் வீதி, பிரதான வீதி, புனித மிக்கேல் கல்லூரி வரை இடம்பெற்றன.
நகரைத் துப்பரவாக வைத்திருக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வோரு வார இறுதி நாளிலும் காலையில் இவ்வேலைத்திட்டங்களை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.
இதன்போது நகரில் உள்ள கடை உரிமையாளர் இருவர் கழிவு நீரை பொது வடிகானினுள் விட்டதனால் மாநகர சபையின் சுகாதார விதியை மீறியமைக்காக அவர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)