2025 மே 01, வியாழக்கிழமை

இராஜதந்திர போராட்டமே முன்னெடுக்கப்படுகிறது: பொன். செல்வராசா

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 20 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


அன்று அகிம்சைப் போராட்டம் என்றும் பின்னர் ஆயுதப் போராட்டம் என்றும் பல போராட்ட வடிவங்களைச் சந்தித்த நாம்,  இன்று இருக்கும் எமது தமிழ்த் தேசியத் தலைமையான இரா.சம்பந்தன் தலைமையில் தற்போது இராஜதந்திரப் போராட்டத்தை சர்வதேசத்தின் அங்கிகாரத்தை பெறுவதற்காக மேற்கொண்டு வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

குறுமண்வெளி சிக்கனக் கடன் உதவி கூட்டுறவுச்  சங்கத்தின் பரிசளிப்பு விழாவும் வெள்ளி விழாவும் அந்தச் சங்கக் கட்டிடத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விழாக்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வாராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கி.துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'எமது இலக்கை நோக்கிய போராட்ட வடிவங்களில் மாத்திரம் மாற்றம் ஏற்படுகின்றதே தவிர, எமது கொள்கையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. 

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபை அமர்வானது மூன்றாவது தடவையாக இடம்பெறப்போகின்றதாகும். இரண்டு தடவைகளில் தமிழர்களுக்காக சர்வதேசம் குரல் கொடுத்துள்ளதுடன்,  பல தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது. இதேபோன்று மூன்றாவது தடவையாகவும் குரல் கொடுக்கவுள்ளார்கள். இதிலும் எமக்கு வெற்றி நிட்சயம் கிடைக்குமென்று எதிர்பார்த்துள்ளோம்.

இந்த நாடு தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தம் அல்ல. இது அனைத்து இனங்களுக்கும் சொந்தமான நாடு. சிங்களவர், தமிழர், முஸ்லிம்;, பறங்கியர் என பலதரப்பட்டோருக்கும்; சொந்தமான நாடு. அந்த வகையில், சிந்தித்து எமது உரிமைகளைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். எங்களுடைய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு பாடுபட வேண்டும்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டு சாதனைகளை  படைத்துள்ளது. அவை சாராய விற்பனையும் வறுமையும் ஆகும்.  இவை இரண்டும் சமாந்தரமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. இதற்கு துணையாக நிற்பது அரசாங்கம்தான்.

காரணம் மதுபானத்தை விற்பதற்கு அனுமதி கொடுத்ததும் அரசாங்கம்தான். அதேபோன்று மதுவை அருந்த வேண்டாம் என்று கூறுவதும் அரசாங்கம்தான். இதேபோன்று சிகரெட் பாவிக்க வேண்டாம். இதனால், புற்றுநோய் வரும் என்று கூறும் அரசாங்கமானது   சிகரெட் விற்பதற்கு அனுமதியும் கொடுத்துள்ளது. இவ்வாறுதான் அரசாங்கம் ஒருபுறம் தூண்டிவிட்டு, மறுபுறம் தீயை அணைப்பது போன்று செயற்படுகின்றது.

இந்த நாட்டில் முதலாவது தேசியத் தலைவர் என்று கூறினால் அது வேறு யாரும் கிடையாது. அது தமிழன்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.  சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசியத் தலைவராக சேர். பொன். இராமநாதனை பல்லக்கில் ஏற்றி சிங்களவர்; கொண்டு சென்ற வரலாறு கூட இடம்பெற்றிருக்கின்றது. இதன் மூலம், இந்த நாட்டின் தேசியத் தலைவர் தமிழன்தான் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது போராட்டம் முடிந்து விடவில்லை. நாங்கள் இன்னும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான சுதந்திரத்தை பெற முடியும். எமக்கு முன்னர் இரண்டு நாடுகள் போராட்டங்களை ஆரம்பித்தன.  இவற்றில்; ஒன்று பலஸ்தீனம். மற்றையது தென்னாபிரிக்கா. இந்த இரண்டு நாடுகளிலும் எமக்கு முன்னரே போராட்டங்கள்; ஆரம்பித்து விட்டன. ஆனால், பலஸ்தீனத்திற்கான  உரிமைகள் இன்னும் பூரணமாகக் கிடைக்கவில்லை.

ஆகவே, நாங்கள் இன்னும் பொறுத்திருந்துதான் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .