2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மீள்குடியேறியவர்களுக்கு வீட்டுத்திட்டம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கான வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைக்கும் நோக்கிலான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தன்னால் விடுக்கப்பட்ட இம்மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பிலான வேண்டுகோளையடுத்து தனக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸினால், அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த நான்கு வருடங்களாக வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்ட உதவி பொருத்தமான வகையில் வழங்கப்படவில்லை.

சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளில் தற்காலிக கொட்டில்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் தொடர்பான விபரங்களை கிராம சேவையாளர்கள் முறைப்படி மீள் இணைப்புத் திட்டங்களுக்குள் உள்வாங்கவில்லைபோல் தெரிகிறது. பல சேவைகள் இவர்களுக்கு வழங்கப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மன வருத்தத்துடன் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அதேவேளை, பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பும் இவர்கள் மீது தொடர்ந்தவண்ணம் உள்ளது. இதனால் மீளக்குடியேறிய மக்கள் என்ற வகையில் தமது உரிமை பற்றிப் பேசுவதற்குக் கூட அம்மக்கள் அஞ்சுகிறார்கள்.

எனவே இவர்களுக்கு இலவச அரச வீட்டுத்திட்ட உதவி வழங்கி யுத்தத்தில் மிகவும் அகோரமான பாதிப்புக்களுக்கு ஆளாகிய இக்குடும்பங்களுக்கும் குறிப்பாக சிறு குழந்தைகளுக்கும் நீதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 1200 வரையான மீள்குடியேற்றக் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்த்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக கமலதாஸ் தெரிவித்தார்.

அந்த வகையில், யுத்தத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பிலான நிதி வழங்கல் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்தித்தரல் போன்றவற்றுக்காக நலன் விரும்பிகள் எவரும் முன்வர முடியும் என்றும் அதற்காக தன்னைத் தொடர்புகொள்ளுமாறும் கமலதாஸ் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .