2025 மே 02, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பினரின் கூச்சலால் தீர்வு கிட்டாது: முரளிதரன்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


 'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திலும்  மாகாண சபையிலும் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து கொண்டு கூச்சலிடுவதால் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

காணியற்றவர்களுக்கு அரச காணி வழங்கல் தொடர்பாக மட்டக்களப்பு வந்தாறுமூலை சிவத்தபாலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (03) மாலை நடைபெற்ற விஷேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கமநல சேவைகள் திணைக்கள பிரதேச பெரும்பாக உத்தியோகத்தர் எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல சேவை திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம், மீள்குடியேற்ற பிதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பேரின்பமலர் மனோகரதாஸ், பிரத்தியேகச் செயலாளர் பி.ரவீந்திரன், மீள்குடியேற்ற அதிகாரசபை பணிப்பாளர் கே.சத்தியவரதன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் காணியற்றோர் பலர் அமைச்சரைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே கடந்த காலங்களில் எமது மக்கள் இழந்த அபிவிருத்திகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

'மஹிந்த சிந்தனையில், இலங்கையில் காணியற்றவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் உரிமை உண்டு. அரச காணிகளை பிரித்து வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது இது எமது பிரதேச மக்களுக்குத் தெரியாது அரச காணிகளை வழங்குவதை எவரும் தடுக்கவும் முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாயிரம் ஏக்கர் அரச காணியை காணியற்றவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களில் அநேகமானோர் சொந்த காணிகளின்றி வாழ்கின்றனர். அவர்களின் நலன்கருதியே இவ்வாறு ஒரு திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் 39 கிராமங்கள் உள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களர்கள் உள்ளனர். இவர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்ய முடியும் அதனூடாக பல அபிவிருத்திகளைக் கொண்டுவரவும்  முடியும். ஆனால் எமது மக்கள் தமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்துவதில்லை. 

நான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனால்தான் மக்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை கொண்டுவருகிறேன்' என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 

'ஆனால், எமது பிரதேச மக்கள் தேர்தல் காலங்களில் உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு ஏமாற்றமடைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அபிவிருத்திகளின் பயன்களை அனுபவிக்க முடியாதவர்களாகி விடுகின்றீர்கள். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கம் கிரான்புல் வடிச்சலைக் கட்டித்தருவேன் என கூறி அரசியல் செய்கிறார்.

கிரான்புல் வடிச்சல் என்பது ஒரு சாதாரண விடயம் நாங்கள் உறுகாமம் கித்துள் குளங்களை இணைத்து பாரிய நீர்ப்பான திட்டங்களை அமுல்படுத்தவுள்ளோம். மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் பிரதேசங்களில் தடுப்பு அணை கட்டுவதற்கான 1,100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார்.

'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்னமும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதை நிறுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்திலோ மாகாண சபையிலே எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொண்டு கூச்சலிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக 1,168 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்திலுள்ள மகளிர் அமைப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாவட்டத்திலுள்ள 134 ஆலயங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஒரு இலட்சம் வீதம் பணம் வழங்கியுள்ளேன். கிழக்கு மாகாண சபையில் என்ன நடக்கிறது என்று கூட தற்போது மக்களுக்கு தெரியாத நிலையில் இருக்கின்றனர்.

அங்கு தமிழர்களுக்கு என ஒரு அமைச்சரை பெறமுடியாத நிலையை எமது மக்கள் உருவாக்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீதம் தமிழ் வாக்குகள் இருந்தும் ஒரு அமைச்சரை உருவாக்க முடியவில்லை.

இந்த விடயத்தில் முஸ்லிம்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தேர்தல் காலங்களில் பிரிந்து செயற்பட்டாலும் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெற்று அவர்களது சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டு வருகின்றார்கள்' என்று பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .