2025 மே 03, சனிக்கிழமை

உளவியல் ரீதியான முன்னேற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்: பி.எம்.எம்.சார்ள்ஸ்

Kogilavani   / 2014 மார்ச் 13 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள அபிவிருத்திக் குறிகாட்டியில் மிகவும் குறைந்தநிலையில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தினை உயர்த்த வேண்டியதும் உளவியல் ரீதியான முன்னேற்றத்தினை ஏற்படுத்த வேண்டியதும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும் கடமையாகும்' என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறையினைக் குறைக்கும் வலையமைப்பின் மாவட்ட மட்ட வரைபட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இன்று சமுதாயத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வெளியே சொல்லமுடியாத பல பிரச்சினைகளும் இருக்கின்றன. உளவியல் ரீதியான பல பிரச்சினைகள் உள்ளன. அடிப்படையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பெண்களே அடிப்படைக் காரணமாகும்.

ஒரு குழந்தை பிறந்தது முதல் அதனை ஆண் பெண் என வேறுபடுத்தி ஆண்குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்தும் பெண்ணை பின்னொதுக்கியும் பழக்குவது குடும்பத் தலைவிகளாக இருக்கின்ற பெண்களேயாகும்.

அந்த வகையில் முதலில் பெண்களின் உளவியல் சிந்தனையில் மாற்றம் தேவை. அந்த வகையில் அடக்கு முறைகளுக்குக் காரணமாக இருப்பவர்கள் பெண்களேதான். அடக்குமுறைகளுக்குக் காரணமானவர்களே நாமாக இருந்து விட்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தி என்னபயன்.

ஒவ்வொருவரும் தன்னைச் சரியாக மதிப்பிடத் தெரியாவிவட்டால் சமூகத்தில் எவ்வாறு மரியாதை கிடைக்கும். இது ஒவ்வொரு பெண்களுக்கும் பொருந்தும்.

பெண்களாகிய நாங்கள் தான் எம்மைப் பலவீனப்படுத்திக் கொள்கிறோம். பலவீனமான கட்டமைப்பை உருவாக்கிக் கொண்ட நாமே அதற்கான பலன்களையும் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே உங்களுக்குள் இருக்கும் சக்தியை ஆற்றலை உணர்ந்து கொள்ளுங்கள்.

தொலைக்காட்சி நாடகங்களும் சினிமாக்களும்; நடைமுறை வாழ்க்கைக்கு உதவப் போவதில்லை. மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தமக்காக நாளில் ஒரு மணி நேரத்தை ஒதுக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் அபிவிருத்தி, சமூக சேவைகள், முதியோர் அபிவிருத்தி, முன்பள்ளி அபிவிருத்தி என பெருந்தொகை உத்தியோகத்தர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள், அதேநேரம் தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களுமு; பெருந்தொகையில் நிமனம் பெற்றுள்ளனர்.

இந்த உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் அரச உத்தியோகத்தர் என்பதற்கு அப்பால் எம்முடைய சமூகத்தினை வறுமை நிலையில் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்பதறகாக திட சங்கல்ப்பம் பூரண வேண்டும் அப்போது தான் மாவட்டத்தின் வறுமை நிலையினை இல்லாமல் செய்ய முடியும்.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்திப் பிரிவும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் செயலணி ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இச்செயலணியின் மகளிர் தினமாகவும் அமைந்த இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக் குறைக்கும்  வலையமைப்பின் மாவட்ட மட்ட வரைபடம் தொடர்பான  விளக்கத்தினை உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன் வழங்கினார். அதே நேரம், மாவட்ட ரீதியில் தகவல் சேகரிக்கப்பட்ட முறை தொடர்பில் செயலணியின் இணைப்பாளர் எஸ்.ராஜலக்ஸ்மி விளக்கமளித்தார். 

அத்துடன் மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக இனங்காணப்பட்ட விடயங்கள் குறித்து மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருணாளினி சந்திரசேகரம் விளக்கமளித்தார்.
 
தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்று இறுதியில் ஒன்றிணைக்கப்பட்ட எதிர் கால திட்டமிடலுடன் கலந்துரையாடல் முடிவுற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X