2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கருணா,பிள்ளையானை விசாரிக்க வேண்டும்

Kanagaraj   / 2014 மார்ச் 23 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எனது தந்தை 1990ம் ஆண்டு கடத்தப்பட்டது தொடர்பில் அன்று தமிமீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதியாக இருந்த இன்றைய பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திர காந்தன் ஆகியோரை விசாரணை செய்து எனது தந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள இடத்தினை தோண்டி இஸ்லாமிய மார்க்கப்படி அடக்கம் செய்ய காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உதவ வேண்டுமென காத்தான்குடியைச் சேர்ந்த ஆதம்பாவா முகம்மது றியாஸ் என்பவர் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சனிக்கிழமை(22) சாட்சியமளித்தார்.

மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வின் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்து சாட்சியமளித்தார்.

இதன் போது தொடர்ந்து சாட்சியமளித்த ஆதம்பாவா முகம்மது றியாஸ் எனது தந்தையின் பெயர் கலந்தர்லெவ்வை ஆதம்பாவா. தந்தை கடத்தப்படும் போது அவருக்கு 39 வயதாகும்.

12.07.1990 அன்று எனது தந்தை மட்டக்களப்பு குருக்கள் மடம் எனுமிடத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு அன்றிரவே கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனது மூத்த சகோதரர் திருகோணமலையில் நின்றார் அவர் ஒரு பொலிஸ் உத்தியோகததராக அன்று கடமை புரிந்தார். விடுமுறையில் நின்ற அவரை திருகோணமலைக்கு சென்று அழைத்துக் கொண்டு பொலன்னறுவை மன்னம்பிட்டி வீதி வழியாக வரமுடியாததால் அம்பாறைக்கு வந்தார்.
அம்பாறையில் வைத்து எனது சகோதரரை வேறு ஒரு வாகனத்தில் செல்லுமாறும் நான் வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருவதாகவும் கூறி சகோதரை முன்னே அனுப்பி விட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு அவர் ஒரு லொறியில் வந்தார்.

சகோதரர் வீடு வந்து சேர்ந்து விட்டார் ஆனால் எனது தந்தை வீடு வந்து சேரவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பளாந்துறை, குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

எனது தந்தை கடத்தப்பட்ட அந்த நாளில் அதே இடத்தில் வைத்து நூற்றுக்கு மேற்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தோரும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூரைச் சேர்ந்தவர்களும்  விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

தந்தை கடத்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக எங்களது குடும்பம் மிகவும் கஸ்டங்களை எதிர் நோக்கியது.

எனது தந்தை கடத்தப்படும் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதியாக இருந்தவர் இன்றைய பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திர காந்தன் ஆகியோராகும்.

இவர்களை  விசாரணை செய்து எனது தந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள இடத்தினை தோண்டி எடுத்து தந்தையின் உடலை இஸ்லாமிய மார்க்கப்படி அடக்கம் செய்ய உதவ வேண்டுமென அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .