2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பிரதி அதிபர், ஆசிரியர் ஒருவரை இடமாற்றக்கோரி செவ்வாய்க்கிழமை (08) ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாடசாலை அதிபரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், மாணவர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிபர், பிரதி அதிபர், ஆசிரியருக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோசங்களை எழுப்பினர். அத்துடன் பாடசாலைக்கு முன்பாக கொடும்பாவியும் எரி;க்கப்பட்டது.

இதன்போது பாடசாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், பாடசாலை சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

பாடசாலையில் உயர்தர மாணவர்களை வெளியேற்றி பாடசாலையின் வாயில்கதவுகளை மூடியமை, கிரான்குளத்தின் வரலாற்றினை திரவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நூலினை பாடசாலையில் வெளியிடப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த பாடசாலையில் கல்வி கற்ற 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது வேறு இடங்களில் கல்வி கற்கின்றனர். அவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று கல்வி கற்குமாறு பாடசாலையிலேயே அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த நான்கு வருடமாக ஒரு மாணவர் கூட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத நிலையே காணப்படுகின்றது. பாடசாலையில் தன்னிச்சையான செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றன. பாடசாலையின் கல்விநிலை மிகவும் பின்தள்ளியதாகவே காணப்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் நாங்கள் பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ள போதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை எங்களுக்கு முக்கியமானது.

பாடசாலையில் ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்படும்போது பாடசாலை அபிவிருத்திக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பழைய மாணவர்களுடன் கலந்துரையாடியே மேற்கொள்ளப்பட வேண்டும். வழமையாக இவ்வாறே ஏனைய பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் இங்கு மட்டும் அந்த நடைமுறையில்லை. தன்னிச்சையாகவே அனைத்தையும் செய்கிறார்கள்.

அதிபர், பிரதி அதிபர் ஒரு ஆசிரியரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாடசாலையில் ஊழல்கள் நடைபெறுவதன் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் நடக்கின்றன.

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படும்போது குறித்த மூவரும் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம். மூவரையும் இடமாற்றம் செய்யுமாறு கோரியுள்ளோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரனிடம் கேட்டபோது,

'ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும். உரிய விசாரணைகளின் பின்னரே உரிய பதில்கள் வழங்கப்படும். பாடசாலை விடுமுறையென்றபடியால் பாடசாலை ஆரம்பமானதும் விசாரணைகள் செய்யப்படும். எதிர்வரும் மே மாதத்துக்குள் உரிய பதில் அளிக்கப்படும். அதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X