2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'மாணவர்கள் பல்துறைகளிலும் வளரவேண்டும்'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதுடன் நின்றுவிடாது, ஓய்வுநேரங்களில் கணினி அறிவு  உட்பட ஏனைய நல்ல செயற்பாடுகளிலும் ஈடுபட்டு மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு துறைகளிலும் வளர வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  2011ஆம் 2012ஆம் கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக மாணவர்கள் 300 பேருக்கு  மஹாபொல புலமைப்பரிசில்கள்  வெள்ளிக்கிழமை (11) வழங்கப்பட்டன. மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மஹாபொல புலமைப்பரிசில் திட்டம் முன்னாள் அமைச்சர் அத்துலத் முதலியால் பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்ற மற்றும்  வசதி குறைந்த மாணவர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

எமது ஜனாதிபதியால் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த வரவு - செலவுத்திட்டத்தில் பல கோடிக்கணக்கான நிதி பல்கலைக்கழக மாணவர்களின் நன்மைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் மாணவர்களின் விடுதிகளுக்கான ஒதுக்கீடுகளாகும்.
மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதுடன் மட்டுமல்லாது, நாட்டின் அபிவிருத்தி சார்ந்ததும் மற்றும்  நல்ல ஒழுக்க விழுமியங்களையும் சமூகத்தன்மையுடையவர்களாகவும் தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இது எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றங்களுக்கு பங்களிக்க வேண்டும். அதுபோல பெற்றோர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதுடன் நின்றுவிடாது, ஓய்வுநேரங்களில் கணினி அறிவு  உட்பட ஏனைய நல்ல  செயற்பாடுகளிலும் ஈடுபட்டு மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு துறைகளிலும்  வளர வேண்டும். அப்போது தான் சிறந்ததொரு விற்பன்னராக நீங்கள் வெளிவர முடியும்.

ஜனாதிபதி கடந்த வருடம் நாடு பூராகவும் 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்கினார். அதில் 2 ஆயிரம் பேர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 200 வரையானோருக்கு திணைக்களங்களில் இணைக்க முடியாதுள்ளது. இதற்கு அவர்கள் கற்றுக்கொண்ட பாடம்;, பெற்ற பாடங்கள் தாக்கம் செலுத்துகின்றன. அதேநேரம், திணைக்களங்களுக்குள் இணைக்கப்படாமலும் இதே அளவு தொகையினர் உள்ளனர். அதனை விடவும் தற்போது வெளியாகிய 1,500 பேர் இருக்கிறார்கள்.

நீங்கள் வெளிவரும்போது உங்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படாதிருக்க,  சகல துறைகளிலும் தொழில்நுட்ப, கணினி அறிவு பெற்று நீங்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவர வேண்டும். அப்போது தனியார் திணைக்களங்களில் வேலைவாய்ப்புக்கள் இலகுவாகப் பெறக்கூடியதாக இருக்கும். முக்கியமாக மஹாபொல புலமைப்பரிசில் பெறும் நீங்கள் நல்ல கல்வியாளர்களாகவும் விற்பன்னர்களாகவும் மாறி நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேம்பாட்டுக்கும் உழைப்பவர்களாக இருத்தல் வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X