2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'மதங்கள் நல்வழிப்படுத்தும் முறைகளை போதிக்கின்றன'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய  மதங்கள் மனிதனின் வாழ்வியலை நல்வழிப்படுத்தும் முறைகளை போதிப்பதுடன், ஏனைய மதங்களை பரஸ்பரம், புரிந்துணர்வு, சமத்துவத்தோடு மதிக்க வேண்டும் என்று கூறுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி. விளையாட்டுக் கழகத்தின் 86ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு விழா கழகத்தின் பயனியர் வீதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இந்துக் குருமார்கள் இறைவனுக்கு சமய அனுஷ்டானங்களைச் செய்யும்போது, பௌத்த குருமார்கள் அரசியலில் நுழைந்து அடாவடித்தனத்தில்  ஈடுபடுகின்றனர்.

பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய  மதங்கள் மனிதனின் வாழ்வியலை நல்வழிப்படுத்தும் முறைகளை போதிக்கின்றன. அத்துடன், ஏனைய மதங்களை பரஸ்பரம், புரிந்துணர்வு, சமத்துவத்தோடு மதிக்க வேண்டும் என்றும்  கூறுகின்றன.

மாறாக பௌத்த பிக்குமார்கள் அரசியலை ஆயுதமாகக் கையில் எடுத்துக்கொண்டு இன்று நாட்டில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு அமைதியைக் குழப்புகின்றனர். இவர்கள் மதத் தலைவர்கள் என்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை.

அண்மையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றத்திற்காக பௌத்த மதகுரு ஒருவர் பிரதேச செயலகத்தினுள் புகுந்து பிரதேச செயலாளரை அச்சுறுத்தி அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் இப்போது நீதிமன்றம்வரை சென்றுள்ளது. தமிழர்களின் இருப்பிடம் மற்றும் தமிழ் இனப்பரம்பலை கட்டுப்படுத்த அவர் முயலுகின்றனர்.

தமிழர்களின் இன, மத, கல்வி கலாசார மற்றும் அரசியல் அபிலாஷைகள் எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் அஹிம்சை ரீதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முடியாத நிலையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பின்பு ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனுக்காக இன்று மீண்டும் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் மீண்டும் அஹிம்சை வழியில் போராட ஆரம்பித்துள்ளது. இதற்கான தீர்வுகள் மிக விரைவில் சர்வதேசத்திடமிருந்து எமக்குக் கிடைக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X