2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் கைப்பணிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 மே 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்திப் பொருட்கள் அதிக வளர்ச்சி கண்டுவரும் நிலையில் பிரம்பு, பன், கைத்தறி, மட்பாண்டம் மற்றும் தெங்குசார்ந்த கைப்பணி பொருட்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில்; தனது அமைச்சின் கீழ் உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் சந்தைப்படுத்தல் கைப்பணிக் கிராமங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

'வாழ்வின் எழுச்சி' திட்டத்தின் கீழ் பனை மற்றும் தெங்குசார்ந்த பயிற்சிகளை நிறைவுசெய்த 168 தொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது. இங்கு  உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த கால யுத்தமானது சொந்த உழைப்பின்றி எவற்றிலாவது தங்கியிருக்கவேண்டிய நிலைக்கு எமது மக்களை தள்ளியுள்ளது. யுத்தத்தின் பின்னரான இக்காலப்பகுதியில் எமது மக்களை சொந்தக்காலில் நிற்கக்கூடிய சமூகமாக நாம் கட்டியெழுப்பி வருகின்றோம்.

தொடர்ந்து எமது இணக்க அரசியல் நடைமுறையின் மூலம் எமது மக்களின் கடந்த கால துயரங்களை படிப்படியாக நாம் முன்னேற்றி வருவதுடன்,  அரசில் பங்கெடுத்துள்ளதன் ஊடாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எமது மக்களுக்கான அபிவிருத்தி உட்பட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம்.  இம்மக்களின் உரிமைக்காகவும் அயராது உழைத்து வருகின்றோம்.

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'வாழ்வின் எழுச்சி' திட்டத்தின் ஊடாக தனிநபரை பலப்படுத்துவதன் மூலம் அந்தக் குடும்பத்தை பலப்படுத்தி அவர்கள் சார்ந்த சமூகத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஜனாதிபதிக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் எமது மக்கள் சார்பில் எனது நன்றியைத்; தெரிவித்துக் கொள்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயிற்சியாளர்களை மேம்படுத்தும் வகையில், எம்மாலான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குவதற்கு  தயாராகவிருப்பதுடன், அதற்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பக்கபலமாக இருந்து வருகின்றார்.

இப்பகுதி மக்கள் தொடர்பில் எனக்கு அக்கறையும் உரிமையும் உண்டு என்பதனால், அவர்களது நலன் சார்ந்து உழைக்கவேண்டியது எனது கடமையாகும்.

அந்த வகையில் நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரது பங்களிப்புக்களும் அவசியமாகும்.நாங்கள் வழங்குகின்ற வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி எமது மக்கள் சொந்தக்காலில் நின்று வாழ்வில் முன்னேறுவதற்கு முன்வரவேண்டும்' என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 'வாழ்வின் எழுச்சி' திட்டத்தின் மூலம் 700 பேர் தொழில் முயற்சிகளுக்கான பயிற்சியை பெற்றுள்ளதுடன், இவர்களில் 350 பேருக்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டன. இந்த நிலையில், 168 பேருக்கு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை (13) வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டச் செயலர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர விநாயகமூர்த்தி; முரளிதரன்,  பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X