2025 மே 02, வெள்ளிக்கிழமை

'வறுமையை போக்க சமுர்த்தி உத்தியோகத்தர்கள் திறமையாக செயற்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 மே 22 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வறுமையை போக்குவதற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் திறமையாகச்  செயற்பட வேண்டுமென  அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையிலான சந்திப்பு மாவட்டச் செயலகத்தில்  புதன்கிழமை (21) நடைபெற்றது.  இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மக்களின் வறுமையை போக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் திறமையாகவும்  செயற்படவேண்டும்.

இம்மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிச் சங்கங்களில் 2,000 மில்லியன் ரூபா பணம் உள்ளது. இவற்றை சமுர்த்தி பயனாளிகள், வறுமையிலுள்ளவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கடனாக வழங்கி அவர்களின் வறுமையை போக்குவதற்கு உதவ வேண்டும்.
மேலும், இம்மாவட்டத்தில் 15 அரசசார்பற்ற நிறுவனங்கள் 30 சதவீத வட்டிக்கு மக்களுக்கு கடனை கொடுத்து மிகவும் கஷ்டத்திற்குள்ளாக்கியுள்ளனர். இவ்வட்டிக்கு கடன் எடுத்த சிலர் இதை ஈடுசெய்ய முடியாமல் தற்கொலை செய்ததுடன், பலர் கஷ்டத்திலுள்ளனர்.

இவ்வாறு அதிகளவான வட்டிக்கு கடன் எடுக்கச் செல்லும் மக்களை, அங்கு செல்வதை தடுத்து இச்சமுர்த்தி வங்கியிலுள்ள பணத்தை அவர்களின் வாழ்வதாரத்திற்கு கடனாக வழங்க வேண்டும்.

இங்குள்ள  சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சமுர்த்தி நிவாரண முத்திரை உரியவர்களுக்கு அதை பெற தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். தகுதியற்ற சில குடும்பங்களுக்கும் சமுர்த்தி நிவாரண முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இவை தொடர்பில் நான் பரிசீலனைக்குட்படுத்தவுள்ளேன். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை  எதிர்காலத்தில் தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என்றார். 

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன்,  அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பொருளாளர் எம்.பாசுல் அன்வர், அதன் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் உபதலைவர் எம்.ஐயூப்கான், செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .