2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 மே 22 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனியார் துறையினரின் உதவியையும் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை உலகறியச் செய்வதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும் மாகாண சபையின் வளங்கள் வரையருக்கப்பட்டிருந்தாலும் தனியார் துறையின் உதவியுடன் இத்துறையை அபிவிருத்தி செய்ய முடியுமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக சுற்றுலாத்துறையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று புதன்கிழமை (21) கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாண அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் உறையாற்றிய அவர் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மூலம் கூடுதல் பங்களிப்பை செய்ய முடியும். இத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து இருக்கிறோம்.
மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதால் தனியார் துறையின் உதவியுடன் இத்துறை அபிவிருத்தி செய்யப்படும். கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பாக உலகறியச் செய்வதற்கான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளது. இதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு அவசியம்.

யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தற்பொழுது வழமைக்கு திரும்பி இருப்பதுடன் அபிவிருத்தியை நோக்கி முன்னேறி வருகிறது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதில் உறுதியாகவே இருக்கிறோம்.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா மையங்கள் இருக்கின்றன. நீர் விளையாட்டுக்களை நிகழ்த்தக்கூடிய பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாற்றி அமைக்க முடியுமென அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கூறினார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஆர்.ஞானசேகரன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எஸ்.ஜெயவீர, ஏசியா பௌன்டேசன் அமைப்பின் வதிவிட பிரதிநிதி டினேசா டி.சில்வா விக்கிரம நாயக்க மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்பு பட்ட பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .