2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இளைஞர், யுவதிகள் தொழில் பெற முனையவேண்டும்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் இளைஞர், யுவதிகள்  பெற்றோருக்கு பாரமாக இருக்காது, தொழில் கல்வியை மேற்கொண்டு தொழிலை பெற்றுக்கொள்ள முனைய வேண்டுமென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தொழில் பயிற்சிகளில் ஈடுபடுவதிலுள்ள பிரச்சினைகள் மற்றும்  தடைகள் பற்றிய கலந்துரையாடல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (03)  நடைபெற்றது. இதன்போது  கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

நலிவுற்ற பெண்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சேவ்த சில்ரன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  அனுசரணையுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'க.பொ.த. சாதரணதரப் பரீட்சையின் பின்னர் க.பொ.த. உயர்தரம் படிப்பதற்கு விருப்பமற்ற இளைஞர், யுவதிகள் மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழகத்துக்கு  தெரிவாகாத இளைஞர், யுவதிகள்  தங்களது எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு  தவறிவிடுகின்றனர்.
இளைஞர், யுவதிகள் தொழில் பயிற்சியொன்றை தெரிவுசெய்து அப்பயிற்சியை முடித்து தொழில்  தேட வேண்டும். இதற்கு இன்றைய இச்சந்தர்ப்பம் முக்கியமாக அமைவதுடன், இதை தவறவிடக்கூடாது.
 
இன்று அரசாங்கம் இளைஞர், யுவதிகளுக்கு இலவசமாக தொழில் பயிற்சிகளை பல வழிகளிலும் வழங்குகிறது. ஆனால், எமது இளைஞர், யுவதிகள் பணம் செலுத்தி தொழில் கல்வியை  பெறுவதில் ஆர்வமாகவுள்ளனர்.

இந்த அரசாங்கம் இளைஞர், யுவதிகளை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுகிறது.  அவர்களின் கல்வி, விளையாட்டு, பொருளாதாரம் இவ்வாறு சிறந்த வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் சமூகத்தில் சிறந்த பயனுள்ள ஒருவராக இளைஞர்களை மாற்றவும் அவர்களை சமூகத்துக்கு பயனுடையவராக வளர்த்தெடுக்கவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழகங்களூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

'மஹிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தினூடாக இளைஞர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் இதற்கான வழிகாட்டல்களை வழங்குகின்றனர்' என்றார்.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி டி.டேவிட், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் பிரதி அதிபர் கே.தியாகராசா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X