2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நெல் கொள்வனவுக்கு பயன்படுத்தாத நிதி திருப்பியனுப்பப்படுவது துரதிஷ்டம்: சார்ல்ஸ்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஏ.எச்.ஏ. ஹுஸைன்


நெல்கொள்வுனவுக்காக திறைசேரியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாததனால் அந்த நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்ப வேண்டிய ஒரு துரதிஷ்டம் ஏற்பட்டிருப்பதோடு, எதிர்வரும் காலங்களில் அவ்வாறான நிதியொன்றை நான் திறைசேரியிலிருந்து பெறுவதாயின் பல்வேறு விளக்கங்களையும் திறைசேரிக்கு அளிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ் நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

92ஆவது சர்வதேச கூட்டுறவு விழாவை முன்னிட்டு, நீண்டகால சேவையிலுள்ள ஏறாவூரைச் சேர்ந்த கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நினைவு விருது வழங்கும் வைபவம் ஏறாவூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை மாலை (13) இடம்பெற்றது.

ஏறாவூர் கூட்டுவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான வி. திவாகரசர்மா, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஜி. ராஜினி மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ். கிருபைராஜசிங்கம், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

கடந்த வருட அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 20 மில்லின் ரூபாய் செலவில் களஞ்சிய சாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடத்தில் திறைசேரியிலிருந்து உடனடியாக ஐம்பது மில்லியன் ரூபாவை நெல் கொள்வனவுக்hக நான் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருந்தேன். கிரான் கூட்டுறவுச் சங்கத்தைத் தவிர வேறெந்தக் கூட்டுறவுச் சங்கமும் அந்த நிதியைப் பெற்று ஒரு கிலோ நெல்லைக் கூட கொள்வனவு செய்திருக்கவில்லை.

கிரான் கூட்டுறவுச் சங்கம் தனக்குக் கிடைத்த நிதியைக் கொண்டு இரண்டு மாதகாலத்திற்குள் 6 இலட்ச ரூபாவை இலாபமாகப் பெற்றுள்ளார்கள்.
ஏனைய கூட்டுறவுச் சங்கங்கள் அந் நிதியைப் பயன்படுத்தாததனால் நிதியைதிருப்பியனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையோடு நான் நெருங்கிப் பணியாற்றியிருக்கின்றேன். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே குறிப்பாக கடந்த 30 வருட கால யுத்தத்திலே கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்கு நிவாரணங்களை மாத்திரம் வழங்குகின்ற பணியை செய்து கொண்டிருந்தார்கள்.

யுத்தமும் முடிந்து நிவாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நேரிட்டபோது கூட்டுறவுச் சங்கங்கள் வெறும் கையோடு இருந்தன. கூட்டுவுச் சங்கங்களுக்கு தப்பிப்பிழைக்க வேறு வழியிருக்கவில்லை.

நான் வவுனியாவில் அரசாங்க அதிபராக இருக்கும்போது கூட்டுறவுச் சங்கங்களின் தூர நோக்கிற்கமைவாக அவற்றைப் பல நோக்கங்களையும் நிறைவேற்றக்கூடிய சங்கங்களாக மாற்றியமைத்தேன். இன்று அங்குள்ள கூட்டுறவுச் சங்கம் வடமாகாணத்திலே சிறந்த ஒரு கூட்டுறவுச் சங்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நான் இங்கு வந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கடமையைப் பொறுப்பேற்றதும் மட்டக்களப்பு மாவட்டத்திலே கூட்டுறவுத்துறை பல்வேறு சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்று அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் என்னிடம் கூறினார்கள், அதேவேளை ஏறாவூர் கூட்டுறவுச் சங்கம் மாத்திரம் மிகவும் தனித்துவமாக சிறப்பாக சேவையாற்றி வருகின்றது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

உண்மையில் ஏறாவூர் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சி மிக அபரிமிதமானது, இது ஏனைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாகும். இத்தகையதொரு வளர்ச்சியை எய்தப் பெற்றதற்காக இந்தக் கூட்டுறவுச் தலைவர், சங்கத்தின் இயக்குநர் சபை, அதன் பொது முகாமையாளர், அதன் பணியாளர் தொகுதி எல்லோரையும் நான் பாராட்டுகின்றேன்.

அழிவு அபிவிருத்தியின் ஆரம்பம் என்பது போல கடந்த கால யுத்தத்தின் போது பாரிய அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்த ஏறாவூர் நகரம் இன்று அந்த அழிவுகளிலிருந்து மீண்டெழுந்திருக்கின்றது.

விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், தாராளத்தன்மையும் நம்மை சாதனை படைக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆரம்பித்திருக்கின்ற வைத்தியசாலை, பல்பொருள் அங்காடி, எரிபொருள் நிரப்பு நிலையம், வாகன சுத்திகரிப்பு நிலையம் என்று அதன் சேவைகள் விரிவாக்கம் பெற்றுச் செல்கின்றது.

மக்கள் சார்ந்த, கல்வி, சுகாதாரம், பொதுச் சேவை என்று பல சமூக நலத்திட்டங்களை முன்னோக்கியதாக இந்த கூட்டுறவுச் சங்கத்தின் பணிகள் பிரதேசங்களைக் கடந்து சென்று கொண்டிருப்பது வரவேற்கத் தக்க விடயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்ற ஐரோப்பிய நாடுகளினூடான திட்டங்களுக்கும் ஏறாவூர் கூட்டுறவுச் சங்கத்திற்கு முடிந்தளவு சகல வழிகளிலும் உதவ மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தயாராக இருக்கின்றது.

இந்த வருடத்திலிருந்து, மாவட்டச் செயலகம் உட்பட அனைத்து பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்குமான காகிதாதிகளை கூட்டுறவுச் சங்கங்களுக்கூடாகக் கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனூடாகவும் கூட்டுறவுச் சங்கங்கள் இலாபமடைய முடியும். கூட்டுறவுத் துறையை வளர்த்தெடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் முடிந்தளவு உதவக் காத்திருக்கின்றது.

மக்களுடைய சேவையிலே நிலைத்து நின்று சேவையாற்றக் கூடிய ஒரேயொரு துறை கூட்டுறவுச் சேவை மாத்திரமே. அது ஒரு சமூக நிறுவனமாக திகழ்வதே இதற்கான காரணமாகும்.

கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தி வளப்படுத்துவதனூடாக, பிரதேச, கிராமிய, குடும்ப மட்டத்திலே பல சாதகமான அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும். இதனை நான் வவுனியா மாவட்டத்திலே செயல்படுத்திக்காட்டி வெற்றியும் கண்டிருக்கின்றேன்.

கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான பல முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. அவை எதிர்காலத்திலே நடைமுறைக்கு வரும் பொரும்பொழுது இன்னும் சிறப்பான சேவைகளை கூட்டுறவுச் சங்கங்கள் ஆற்ற முடியும் என தெரிவித்தார்.

கல்வி அடைவுகளில் கடந்த மூன்று வருடங்களாக தேசிய ரீதியில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான விருது, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள ஏறாவூர் கல்விக் கோட்டத்திற்கான விருது, ஏறாவூர்க் கல்விக் கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய பாடசாலைகளுக்கான விருது, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான விருது என்பனவற்றுடன் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தினை மிகையூதியமாக வழங்குதல், நீண்டகால சேவையிலுள்ள ஏறாவூரைச் சேர்ந்த கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நினைவு விருது வழங்குதலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X