2025 மே 01, வியாழக்கிழமை

முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும் : அரியநேத்திரன் எம்.பி

Kanagaraj   / 2014 ஜூன் 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு துதிபாடுவதை விடுத்து, இலங்கைக்கு வரவுள்ள ஐ.நா.விசாரணைக் குழுவினை அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை விடுக்கவேண்டும் என்பதையே அளுத்கம சம்பவம் எடுத்துக்காட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அளுத்கமவில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;

அளுத்கமவில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. முஸ்லிம் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் இந்த வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் பொதுபலசேனா மட்டுமல்ல. இது அரசாங்கத்தின் முழு ஆசியுடனேயே நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழமுடியாது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

அத்துடன் இந்தவேளையில், சிறுபான்மை மக்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டிய தேவையினையும் வெளிக்காட்டி நிற்கின்றது.

அரசாங்கத்துக்கு துதிபாடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் நிலையில் இருந்து மாறி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுவரும் உரிமை மீறல்களை விசாரணை செய்ய இங்கு வர எண்ணியுள்ள ஐ.நா.விசாரணைக் குழுவினை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்.

எங்களுக்கான ஒரு பலம் அமையும்போதே எங்களை இன்னொருவர் அச்சுறுத்தும் நிலையை நாங்கள் இல்லாமல் செய்யமுடியும்.

இந்த சம்பவம் அளுத்கமையுடன் முடிவடையும் என்று நாங்கள் கருதவில்லை. கடந்த காலத்தில் இந்த நாட்டில் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் என்ன நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் முதுகெலும்பு இல்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

எனவே இது தொடர்பில் சிறுபான்மை சமூகங்கள் தங்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .