2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தமிழ், சிங்கள, முஸ்லிம்களின் இன ஒற்றுமையை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் இன ஒற்றுமையை வலியுறுத்தி மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.  தமிழ், சிங்கள, முஸ்லிம் சகோதர மக்களே! என்று விழித்து அந்தத் துண்;டுப்பிரசுரத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இனவாத பிரச்சினையைத் தூண்டிவிடும் தீய சக்திகளின் முயற்சிகளுக்கு நீங்களும் அகப்படாதீர்! முன்னைய காலத்திலிருந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள், சகோதரர்களாக ஒன்றிணைந்து ஒரே இனமாக சமாதானத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மூன்று தசாப்தமாக எமது நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை அழிப்பதற்கு முதல் இன வேறுபாடின்றி நாம் அனைவரும் பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டோம்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி நாட்டிற்குள் சமாதானத்தை முழுமையாக நிலைநாட்டியிருக்கும் இவ்வேளையில், எமது தாய் நாட்டை மிகவும் அடிப்படைவாதிகளின் பிரச்சினையாக்கி நாட்டைச் சீர்குலைப்பதற்கு வெளிநாட்டின் சில தீய சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

எமது நாட்டை அழிப்பதற்காக முயற்சிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு தீய சக்திகள் தமது நோக்கத்திற்காக போதுமானளவு நிதி மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை நாட்டைச் சீர்குலைக்கும் தீய சக்திகளுக்கு வழங்குகின்றன.

அவ்வாறான நிதிகள் கிடைக்கப்பெறும் பல்வேறுபட்ட அமைப்புக்கள் கலவரத்தைத் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றன. இவர்களின் ஒரே நோக்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே இனப்பிரச்சினையைத் தூண்டி விட்டு எமது நாட்டிற்குள் கலவரத்தை உண்டுபண்ணி, நாட்டைச் சீர்குலைப்பதேயாகும்.

இவ்வாறான அமைப்புக்களால் பல்வேறுபட்ட திட்டங்களின் மூலம் தென் மாகாணத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன. அங்குமட்டுமல்ல நாடுபூராகவும் இந்த நிலைமையை உண்டுபண்ணுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக இனங்களுக்குள்ளே இருக்கும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைத்து வெளிநாட்டுத் தீய சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்ற அவர்கள் செயற்படுகின்றார்கள்.

இவர்கள் பல்வேறுபட்ட பொய்யான தகவல்களைப் பிரசுரித்து சகோதர இனங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுகின்றார்கள். பிரச்சினைகளைத் தூண்டி விடுவதற்கும் முயற்சிக்கின்றார்கள். இந்த சதித்திட்டங்களால் பாதிக்கப்படுவது தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களேயாகும்.

தென் மாகாணத்தில் நடந்தது ஒருசிலரின் அடிப்படை வாதத்தால் நடந்ததேயாகும். இந்நாட்டில் அமைதியை விரும்பும் ஒருவரும் இத்தகைய அடிப்படைவாத வன்முறைகளை அனுமதிக்கவே மாட்டார்கள். சில இடங்களில் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களின் வியாபார நிலையங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறு சிறு அடைப்புக்களின் நடவடிக்கைகள் காரணமாக பல்வேறுபட்ட பொய்யான வதந்திகளை நம்பி இந்த வியாபாரி நிலையங்களை உடைத்து  பொருட்களைக் கொள்ளையடித்து அடித்தும் விட்டார்கள்' என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த துண்டுப் பிரசுரம் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என உரிமை கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .