2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்

Menaka Mookandi   / 2014 ஜூலை 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதுவரை காலமும் ஒரு கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய், தற்போது ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது வழமையை விட எட்டு மடங்கு அதிகமாகும். வழமையாக ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் சந்தையில் 100 தொடக்கம் 150 ரூபா வரையில்தான் விற்பனையாவதுண்டு.

இது போன்று ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகூடியளவில் உயர்ந்துள்ளன. 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த கோவா தற்பொழுது ஒரு கிலோகிராம் 170 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

உருளைக்கிழங்கு, தக்காளி, கரட், போஞ்சி, லீக்;ஸ், பீற்ரூட், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறிவகைகளும் அதிகரித்த விலையில் விற்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட மரக்கறி வகைகள் ஒரு கிலோகிராம் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சாதாரணமாக இந்த வகை மரக்கறிகள் ஒரு கிலோகிராம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சியுடன் கூடிய காலநிலையினால் விவசாயிகள் தமது மரக்கறிச் செய்கையினைக் கைவிட்டுள்ளதே இந்தளவு திடீர் விலயேற்றதுக்குக் காரணம் என்று விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு விரிவாக்கற் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஓகஸ்ட் மாத இறுதி வரை மரக்கறிகளின் விலை அதிகரித்தே காணப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது புனித றமழான் நோன்பு காலமாகையால் மரக்கறிகளின் நுகர்வு அதிகரித்துள்ள அதேவேளையில் மரக்கறிகளுக்கு விலை அதிகரிப்பும் தட்டுப்பாடும் நிலவுகிறது.

மரக்கறிகளுக்கு என்றுமில்லாதளவு ஏற்பட்டுள்ள இவ்வாறான அசாதாரண விலையேற்றம் தமக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .