2025 மே 02, வெள்ளிக்கிழமை

'சக வாழ்வு, இன ஐக்கியத்துக்காக முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


முஸ்லிம்கள் இந்த நாட்டில் சக வாழ்வுக்காகவும் இன ஐக்கியத்துக்காகவும்  பாரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக  மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (15)  நடைபெற்ற சமய, சமூக, நல்லிணக்க இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'முஸ்லிம்கள் இந்த நாட்டில் சக வாழ்வுக்காக  பங்களிப்பை செய்து வருகின்றார்கள். இந்த நாட்டின் தலைநகரகங்களின் மத்தியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் இவர்கள் சகவாழ்வுக்கும் இன ஐக்கியத்துக்கும்  பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்பதைக் காட்டுகின்றது.

கொழும்பு மற்றும் கண்டி உட்பட தலைநகரங்களின் மத்தியில் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. இதேபோன்றுதான் மட்டக்களப்பிலும் நகர மத்தியில் பள்ளிவாசல் அமைந்துள்ளது' என்றார்.

இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

'மட்டக்களப்பு மாவட்டம் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு மாவட்டமாகும். உள்ளங்களாலும் உணர்வுகளாலும் இரண்டறக் கலந்து வாழும் ஒரு மாவட்டமாகும். சகல தரப்பினரும் ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இன ஐக்கியத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட அனைத்து சமூகங்களும் ஒரே இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இந்த ஆண்டு சுமார் 3,000 மில்லியன் ரூபாய் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  உட்கட்டமைப்பு, வறட்சி நிவாரணம் என பல அபிவிருத்திகளுக்காகவும் இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன ஐக்கியமும் ஒற்றுமையுமே இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காரணமாக அமைகின்றன.

மக்களின் தேவைகளை அறிந்து அனைத்துச் சமூகங்களையும் மதித்து சேவையாற்றி வருகின்றோம். எமது ஒவ்வொரு செயற்பாடுகளும் செழுமைமிக்கதாகவும் உயர்வானதாகவும் இருந்து வருகின்றது. அந்த வகையில், எதிர்காலத்திலும் எமது மாவட்டத்தின் அபிவிருத்தி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியமாகும்' என்றார்.

இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர், 

'ஒருவரின் மதத்தையும் அவரின் கலாசாரத்தையும்  ஏனைய  மதத்தவர்கள் மதித்து நடக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற செயற்பாட்டின் கீழ் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

ஒருவர் அவரது சமயத்தை பின்பவற்றுவது, அதை அவர் அமுல்படுத்தி நடப்பது அவருக்குள்ள உரிமையாகும். அதை யாரும் தடைசெய்ய முடியாது.

சமூகங்களிடையே ஐக்கியத்தையும் நல்லுறவையும் கட்டி வளர்ப்பதில் சமயத் தலைவர்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
இந்த நாட்டை ஒன்றுபடுத்தி அனைவரும் சகவாழ்வுடன் வாழ வழி செய்யப்பட்டுள்ளது. அன்பு, கருணை என்பவற்றினால் செய்ய முடியாதது எதுவுமே கிடையாது. இதையே நாம் போதிக்கின்றோம்.

கிழக்கு மாகாணமும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகின்ற ஒரு மாகாணமாகும். இங்கு அனைத்து சமய சமூகத்தவர்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்' என்றார்.

இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி  ஜோசப் பொன்னைய்யா

'சமூக நல்லிணக்கமும் ஒற்றுமையும் இங்கு பிரதிபலிக்கின்றது. இஸ்லாம் ஒற்றுமை, அமைதி, சகவாழ்வுக்காக பாடுபடுகின்றது. நான் இஸ்லாத்தை நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

 மற்றவர்களின் பசி, வறுமையை அறிந்துகொள்வதற்கு நோன்பு நல்ல சந்தர்ப்பமாகும். நோன்பு என்பது ஒரு பயிற்சியாகும். பாவங்களிலிருந்து விடுபட்டு இந்த ஒரு மாதம் பெறும் பயிற்சியானது ஏனைய பதினொரு மாதங்களுக்கும் பாவங்களிலிருந்து தவிர்த்;து வாழ்வதற்கு சிறந்ததொரு பயிற்சியாக இந்த நோன்பு மாதம் அமைகின்றது' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X