2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன.  இதேவேளை, கல்வியியல் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் நியமிக்கப்படுவது சமத்துவத்தை மீறும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பி.உதயரூபன்  இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள  அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, பட்டிருப்பு மற்றும் மேற்கு கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் மேலதிக ஆளணி காணப்படும் மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்முனை வலயங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக கல்குடா வலயத்தில் சேவையாற்றும் ஆசிரியர்கள் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்துக்கு விண்ணப்பம் செய்ய முடியாது தடக்கப்பட்டிருக்கின்றனர். வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டியே அவர்கள் தடுக்கப்படுகின்றனர். இது சமத்துவத்தை மீறும் செயல் என எமது சங்கம் கருதுகின்றது.

கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் கல்வியியல் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட விஞ்ஞான மற்றும் கணித பாடங்களுக்கு கூடுதலான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இருந்தபோதிலும், வெளிமாவட்டங்களுக்கும் மேலதிக ஆசிரிய ஆளணி காணப்படுகின்ற வலயங்களுக்கும் அசிரியர்கள் மேலதிகமாக நியமிக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்துக்கும்  கல்வி கற்பதற்கான உரிமைக்கும் சவாலாக அமைந்துள்ளது.

குறித்த ஆசிரியர்கள் கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்களில் நியமிக்கப்பட்டிருந்தால், நீண்டகால சேவையை வழங்கியிருக்க முடியும்.

அதேவேளை, நிபந்தனை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வலயங்களுக்கிடையிலான இடமாற்றத்துக்கு  விண்ணப்பித்திருக்கவும் முடியும்.

இதேவேளை, 2007ஃ20 இலக்கமிடப்பட்ட  தேசிய இடமாற்றக்கொள்கையை மீறும் வகையில் கல்குடா கல்வி வலய நிர்வாக பிரதி கல்விப் பணிப்பாளரினால்; அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிரூபம் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையையும் அரசியலமைப்பின் சிறப்புரிமையையும் மீறியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி நிர்வாகம் வினைத்திறனற்ற கல்வி நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுவதால் பல ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்குட்பட்டிருப்பதோடு, சட்ட விதிகளுக்கு முரணான இடமாற்றங்கள் மூலமாக ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அரசியமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய மாகாண கல்வி நிர்வாகத்தின் சட்ட விதிகள் அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் மாகாண ஆளுநரினால் பல்வேறு சந்தர்ப்பங்களில்; மீறப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X