2025 மே 03, சனிக்கிழமை

'த.தே.கூட்டமைப்பினரை செல்லப்பிள்ளையாக வைத்திருக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை செல்லப்பிள்ளையாக வைத்திருக்கின்றனர். அவர்களை ஒருபோதும் எமது மக்கள் கஷ்டப்படுத்துவதில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் கமநல கேந்திர நிலையம் ஏற்பாடு செய்;த சிறுபோக நெல் அறுவடை விழா ஆனைகட்டியவெளி வயல் கண்டத்தில் நேற்று சனிக்கிழமை (19)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஏதாவது இடமாற்றம்,  வீதி பிரச்சினைகள், யானை பிரச்சினைகள், வேலை பிரச்சினைகள், மின்சார பிரச்சினைகள் போன்ற  பல பிரச்சினைகளுக்கும் எமது மக்கள்;  எங்களைத்தான் கஷ்டப்படுத்துகின்றனர்.

ஆனால், இந்த  மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை செல்லப்பிள்ளையாக வைத்திருக்கின்றனர்.  அடுத்த முறையும் அவர்கள் மக்களிடம் வருவார்கள். ஏனென்றால், எமது மக்கள் அவர்களை காப்பாற்றி வைத்திருக்கின்றனர்.  இவ்வாறு ஒரு பிரச்சினையும் கொடுக்காமல் செல்லப்பிள்ளையாக வளர்த்து வைத்திருக்கின்றனர். 

எமது மக்கள் எதிர்காலத்தில் அரசியலை நன்கு திட்டமிட வேண்டும். எமது மாவட்டத்தில் உள்ள மற்றைய இன மக்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவவை  பாரிய முன்னேற்றங்களை கண்டுவருகின்றன.

இன்று கிழக்கு மாகாணசபையை நாங்கள் தவறவிட்டுள்ளோம்.  மாகாணசபை அமைச்சர்களை எமது தமிழ் மக்கள் சந்திப்பதுண்டா? அவர்களிடமிருந்து எதாவது நன்மைகள் பெறுவதுண்டா? இல்லை. ஆனால், நாங்கள் கைப்பற்றியிருந்தால் எவ்வளவோ நன்மைகளை பெற்றிருக்க முடியும்.

படுவான்கரை பிரதேசத்தை பொறுத்தவரை  மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.  பல பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் விவசாயிகள் காரில் சென்று வேளாண்மை செய்யக்கூடிய வகையில் வயல்வெளிகளுக்குச் செல்கின்ற பாதைகள் அமைத்து தரப்படும். இவ்வாறு  பூர்த்தி செய்ய வேண்டிய பல தேவைகள் இன்னும் உள்ளன.

இவற்றை மேற்கொள்வதாக இருந்தால், எமது மக்கள் வெல்லக்கூடிய ஜனாதிபதிக்கு வாக்குகளை வழங்க வேண்டும். ஏனென்றால், நிட்;சயமாக தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது உண்மை. ஆனால், எமது மக்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், யாழ்ப்பாணத்திலிருக்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் என்ன சொல்கின்றனரோ அவற்றைக் கேட்டுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்வதற்கே வாக்களிக்கின்றனர்.

சென்ற முறை என்ன செய்தார்கள் எமது மக்களை கொன்றொழித்த சரத் பொன்சேகவுக்குத்தான் வாக்களித்தார்கள். அவர் வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் சிந்தித்துப் பாருங்கள். இதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் உணர்வுகளைத் தூண்டியே மேற்கொண்டிருந்தது. உண்மையான தமிழ் உணர்வுள்ளவர்களாக இருந்தால்,  எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றாவது கூறியிருப்பார்கள். இதற்காக எமது மக்கள் ஏதும் கேள்விகள் கேட்டார்களா? இல்லை.

அனைத்து மக்களும் வளர்ச்சியடைகின்றபோதுதான் பொருளாதாரத்தில் தன்னிறைவு காணலாம். இதுதான் எங்களது ஆசையும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான மக்கள் விவசாயத்தில்தான் தங்கியுள்ளனர். விவசாயம் வளர்கின்றபோதுதான் எமது பொருளாதாரமும் வளர்ச்சியடையும். எனவே அவற்றை முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைளும் எடுக்கப்பட வேண்டும்.

இதனால்தான் நான் நாடாளுமன்றத்தில் நுழைந்த பின்னர் பல குளங்களை அபிவிருத்தி செய்துள்ளேன். மேலும் அபவிருத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளேன்.

விவசாயத்தில் பல நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்று நாங்கள் பாரம்பரிய விவசாய முறையையே கைக்கொண்டு வருகின்றோம். கிழக்கு பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞானபீடம் உள்ளது. இதில் கற்கின்ற மாணவர்கள் இப்பகுதிக்கு வருவதுமில்லை என்பதுடன், அவர்களை காணவும் முடியாது. இதனால், எமது பகுதிகளில் நவீன விவசாயமுறை கைக்கொள்ளப்படுவதில்லை. அம்மாணவர்கள் இப்பகுதி விவசாய நிலங்களை நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அரசாங்கம் விவசாயிகளுக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை  பயன்படுத்த வேண்டும். இவற்றை  தொடர்ந்து பெறவேண்டுமாயின், எமது தமிழ் மக்கள் மத்தியில் மாற்றம் வரவேண்டும். அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்.

இப்பகுதியில் அமைந்திருக்கின்ற கம்பியாற்றுப் பாலத்தை  மக்கள்; கேட்டதுக்கு அமைய  உடனடியாக அதற்கான நிதியை வேறுவழியில் கொண்டுவந்து கட்டிவித்தோம். ஆனால், எமது மக்கள் அரசாங்கத்துக்கு  வாக்களித்தீர்களா? இல்லை. இதற்காக பாலத்தை கட்டாமல் விட்டோமா? கட்டி முடித்துள்ளோம். அதேபோன்று, மண்முனை பாலத்தை எடுத்துக்கொண்டால் அதற்கும் இவ்வாறுதான் எமது மக்கள் நடந்துகொண்டார்கள்.
சற்று சிந்தித்தால்தான் எதையும் சாதிக்க முடியும்.  இப்போது கூறுகின்றேன் மண்டூர் - குருமண்வெளிக்கிடையிலான பாலத்தையும் நிட்சயமாக கட்டித்தருவேன். ஆனால், நான் சொல்லுகின்றது போல் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் இப்பாலத்தை கட்டித்தருவேன்.

எமது மக்களின் ஆதரவை  அரசாங்கத்துக்கு  காட்ட வேண்டும். காட்டினால்தான் இவ்வாறான காரியங்களை  நிறைவேற்றலாம். மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எப்போதும் தமிழன் தமிழன்தான். வெட்டியெறிந்தலும் தமிழன் தமிழன்தான். நானும் தமிழன்தான் இதனை எவரும் மாற்ற முடியாது. மக்களாகிய உங்களின் நன்மைக்காகதான் சில முடிவுகளையும் மாற்றி எடுத்தேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X