2025 மே 03, சனிக்கிழமை

ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கல்வி நிர்வாகிகள்: ஆசிரியர் சங்கம்

Gavitha   / 2014 ஜூலை 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் வினைத்திறனற்ற கல்வி நிர்வாகிகளின் செயற்பாடுகள் காரணமாக ஆசிரியர்கள் பலர் மன நோயாளிகளாக்கப்படுகின்றார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பி. உதயரூபன் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வினைத்திறனற்ற நிர்வாகிகளினால் தொடர்ச்சியாக பல மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பாடசாலை நேரத்துக்கு மேலதிகமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்களில் செயலமர்வுகளில் கலந்துகொள்ள பணிக்கப்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் வலயங்கள்; முழுவதும் நடைபெறும் வருடாந்த இடமாற்றம் காரணமாக பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக செய்ய முடியாமல் போகின்றது.

மாகாண கல்வித் திணைக்களம், வலயத் திணைக்களம், கல்வி அமைச்சு, ஆளுநர் அலுவலகம் என்று பல்வேறுபட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக வருடம் முழுவதும் ஒவ்வொரு பாடசாலையாக மாற்றமடைவது ஆசிரியர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

உயர்பதவிகளில் இருப்பவர்களின் உறவினர்களுக்கு இடமாற்றம், சலுகைகள், மற்றும் பதவிகள் சட்டவிதிகளுக்கு முரணாக வழங்கப்படுகின்றன.

மாகாண கல்விச் செயலாளர், மாகாண ஆளுநர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் மொழியுரிமை மீறப்படுவதோடு, அச்சமடையும் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். 

பாடசாலை நேரங்களில் அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளின் வினைத்திறனற்ற முகாமைத்துவம் காரணமாக ஆற்றலுள்ள பல ஆசிரியர்கள் தொடர்ச்சியாக உரிமை மீறல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியைகள் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பான குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், மீள் சேவைக்குள் இணைக்கப்படுவதனால் பல ஆசிரியைகள் மன ரீதியில் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனர்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X