2025 மே 03, சனிக்கிழமை

துரையப்பாவாக நான் பார்க்கப்பட்டேன்: அதாவுல்லா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


சிவநேசத்துரை சந்திரகாந்தனை முதலமைச்சர் ஆக்கியதால் முஸ்லிம் சமூகத்தினுள்  தான்  ஒரு முஸ்லிம் துரையப்பாவாக பார்க்கப்பட்டதாக  உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் மாநகர விருது வழங்கும் விழா மாநகரசபை நகர மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக சிவநேசத்துரை சந்திரகாந்தனை நியமிக்க நான் காரணமாக இருந்தேன். இதனால்,  முஸ்லிம் சமூகத்தினுள் நான்  ஒரு முஸ்லிம் துரையப்பாவாக பார்க்கப்பட்டேன்.

தமிழ்ச் சமூகத்தினுள் அல்பிரட் துரையப்பா எப்படி சிலரினால் துரோகியாக பாக்க்கப்படுகின்றாரோ, அவ்வாறு சிவநேசத்துரை சந்திரகாந்தனை முதலமைச்சர் ஆக்கியதால் முஸ்லிம் சமூகத்தினுள் நான் ஒரு துரையப்பாவாக பார்க்கப்பட்டேன்.

கிழக்கு மாகாணத்தை யாரும் ஆட்சி செய்யலாம். அது சிங்களவராக இருந்தாலும் சரி அல்லது தமிழர் அல்லது முஸ்லிம் என யாராக இருந்தாலும் சரி. யாரும் ஆட்சி செய்யலாம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்ததில் இன்று கிழக்கு மாகாணம் இருக்கும் நிலையைப் பார்த்து அதிகம் மகிழ்ச்சி அடைபவன் நான். கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணம் இருந்ததை விட, இன்று கிழக்கு மாகாணம் எப்படி இருக்கின்றது என்பதை நாம் பார்க்கின்றோம்.

எமக்கும் எந்தவொரு திரையும் கிடையாது. வாழ்வியல் ரீதியாக, மொழி ரீதியாக, கலாசார ரீதியாக எந்தவொரு திரையும் கிடையாது. அதேபோன்று, எமது கிழக்கு மாகாணத்தில் அத்தனை வளங்களையும் நாம் கொண்டுள்ளோம்.  இயற்கை வளம் இங்கு நிறையவே காணப்படுகின்றது. இதனால், எமக்குள் எந்தவொரு திரையும் கிடையாது.

எமது நாட்டில் ஒரு சமூகம் மாத்திரம் நிம்மதியுடன் வாழமுடியாது. ஒரு சமூகம் நிம்மதி இழந்து காணப்பட்டால் ஏனைய சமூகங்களும் அமைதி, சமாதானம், நிம்மதி இழந்தே காணப்படும். அனைத்து சமூகங்களினதும் நிம்மதியும் சமதானமும்தான் முக்கியமானது.

போராட்ட வெற்றியென்பது தூய எண்ணத்திலேயே  தங்கியுள்ளது. தூய எண்ணமில்லாத எந்தவொரு போரட்டமும் வெற்றி பெற்றதாக வரலாறுகள் கிடையாது.

எமது எண்ணம், பேச்சு, எழுத்து, செயற்பாடு அனைத்திலும் தூய்மை இருக்க வேண்டும். எனது கட்சிக்கு தேசிய காங்கிரஸ் என ஏன் பெயர் சூட்டப்பட்டது என்றால் இதில் அனைத்து சமூகங்களுக்குமான கட்சி என்பதால்தான்.  அதனால்தான் இதை தேசிய காங்கிரஸ் என வைத்துள்ளோம்.

நான் வகிக்கும் அமைச்சுப்பதவி இந்த நாட்டில் முன்னாள் தலைவர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் ஆர்.பிரேமதாச போன்றோர் வகித்த பதவியாகும். எனது இந்த அமைச்சுப் பதவி மூலம் இந்த நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றங்களின் வளங்களும் அதிகரித்துள்ளன. இது உள்ளூராட்சிமன்றங்களுக்கு ஒரு சிறப்பான காலமாகும்.

கிழக்கு மாகாணத்துக்கு மட்டக்களப்பு மாவட்டம் ஒரு தலைநகரமாகும். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஒரு முன்மாதிரியான ஒரு மாவட்டமாகும். இலங்கையிலுள்ள மாநகரசபைகளில் எழில் மிக்க ஒரு மாநகரசபையாக மட்டக்களப்பு மாநகரசபை விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தில் முதல் மாநகரசபையாகவும் மட்டக்களப்பு மாநகரசபை விளங்குகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் உதயகுமாரை நான் பாராட்டுகின்றேன். அவரின் செயற்றிறமையை வைத்து இந்த மாநகரத்தை அபிவிருத்தி செய்வதில் அவர் காட்டும் ஆர்வத்தை கண்டு நான் அவரைப் பாராட்டுகின்றேன். இலங்கையிலுள்ள ஏனைய மாநகரசபைகளின் ஆணையாளர்களை இங்கு அழைத்து வந்து அவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் உதயகுமாரின் செயற்றிறனை காண்பிக்க வேண்டும் போல் எனக்கு தோன்றுகின்றது. அந்தளவுக்கு  இந்த மாநகரசபையை சிறப்பாக உதயகுமார் வழி நடத்துகின்றார்.

முழு கிழக்கு மாகாணத்துக்கும்  உள்ளூராட்சி ஆணையாளராக இருந்த உதயகுமார் இன்று இந்த மட்டக்களப்பு மாநகரசபை ஆணையளாரக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரின் செயற்றிறனை இங்கு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவுள்ளது. எதிர்காலத்தில் இந்த மட்டக்களப்பு மாநகரசபைக்கு என்னாலான ஒத்துழைப்புக்களையும் முடிந்த உதவிகளையும் வழங்க ஆயத்தமாகவுள்ளளேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • M.A.a.Rasheed Wednesday, 23 July 2014 02:34 PM

    இவர் என்ன சொல்ல வந்தார். என்ன சொன்னார். நீர் ஓர் அரசியல்வாதி அல்லவா.

    Reply : 0       0

    ibnuaboo Wednesday, 23 July 2014 02:54 PM

    அமைச்சரே, உங்கள் உரைமூலம் தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக வருவதை முஸ்லிம்கள் எதிர்த்தார்கள், ஆனால் நான் மட்டும் ஆதரித்தேன் என்று கூறி முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டீர்களே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X