2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'வணக்கஸ்தலங்கள் உடைக்கப்படுவது இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்'

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'இந்து மக்களின் வணக்கஸ்தலங்கள் உடைக்கப்படுவதும் அதன் விக்கிரகங்கள் திருடப்படுவதும் இனங்களுக்கிடையில் விரிசலையும், மோதல்களையும் ஏற்படுத்தும் சதிநாச நடவடிக்கையாகும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன் தெரிவித்தார்

நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயம் அண்மையில், தாக்கி சேதமாக்கப்பட்டமையினைக் கண்டித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில்; மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

'இவ்வாறான நாசகார செயல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக கண்டிப்பதுடன் சதிகாரர்களை உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மீனாட்சியம்மன் ஆலயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன் தனித்துவமானது.

இந்த ஆலயத்தைத் தாக்கி சேதப்படுத்தியமை இந்துக்களின் மனதை பெரிதும் வேதனைக்குள்ளாக்கி இருப்பதுடன் இச்செயல் இன ஐக்கியத்தை சீரழிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தினுடைய போக்குவரத்துப் பாதையினை ஆரம்பத்தில் ஒருவர் தடைசெய்ததாகவும் அதனால் ஆலய நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டு  இன்று சிறிய போக்குவரத்துப் பாதையே இவ் ஆலயத்திற்கு இருப்பதாகவும் அறியமுடிகிறது.

ஒவ்வொரு இனத்தினுடைய வணக்கஸ்தலங்கள், கலை,பண்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலர் திட்டமிட்டு இவ்வாறான தீயகாரியங்களை செய்வதனால் இனம் சார்ந்த சந்தேகங்கள் நிலவுவதைத் தவிர்க்கமுடியாதுள்ளது.

எனவே யார் இந்த நாசகாரச் செயலைச் செய்துள்ளாரோ அவரை பொலிஸார் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இந்தச் செயலை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முற்றாக கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையில் ஒற்றுமையினை சீர்குலைப்பதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதை நாசகாரர்கள் அறிந்து கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X