2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'சட்ட நடவடிக்கை எடுக்காமலிருப்பது கவலையளிக்கின்றது'

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு  சட்ட நடவடிக்கைள் எதுவும் அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படாமல் இருப்பது குறித்து ஆழ்ந்த கவலையடைகின்றோம்' என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய மகஜரில் தெரிவித்துள்ளது.

 கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில்  புதன்கிழமை(23) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் இப்தார் வைபவத்தின் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் இம்மகஜரை கையளித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் அதன் செயலாளர் அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்ட அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
'பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட சில நிகழ்வுகளை மிகவும் கவலையோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பகின்றோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக பல விதமான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுடைய பொருளாதாரம், மத உரிமை, கலாசார விழுமியங்கள் இலக்குகளாக உள்ளன.

அது மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்களால் அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அத்தோடு முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்ட எவையும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதன் விளைவுகள் தான் கடந்த ஜுன் மாதம் 15ஆம் திகதி அளுத்கமை, பேருவலை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீதான பரந்தளவிளான வன்முறை எனக் கூறமுடியும்.

அந்த வன்மறையில்  பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டும், பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த வன்முறைகளுக்கு எதுவிதமான சட்ட நடவடிக்கை ஏதும்இதுவரை எடுக்கப்படவில்லை என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரியப்படுத்துகின்றோம்.

குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற நகரமான காத்தான்குடி கடந்த கொடூர யுத்தத்தின் போது பல தடவை மீண்டும், மீண்டும் தாக்குதலுக்குள்ளாகி நூற்றுக்கணக்கான உயிர்கள் இழந்தமையை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது இந்த மக்கள் சுதந்திரமான சாதரண வாழ்க்கைக்கு திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில் சில அடிப்படை வாத பௌத்த அமைப்புக்கள் இந்த நகரத்தின் மீது இலக்கை தொடங்கியிருக்கின்றார்கள்.

பொதுபல சேனா பல்வேறு பிழையான குற்றச்சாட்டுக்களையும் காத்தான்குடிக்கு எதிராக செய்து வருவது ஏன் என உங்களுக்கு தற்போது புரிய வரும்.

காத்தான்குடி மக்கள் தங்களது இஸ்லாமிய கலாசாரத்தினை பின்பற்றுவதை தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புக்களுடன் ஒப்பிட்டு பிழையான பிரசாரத்தினை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.
 
இவ்வாறான செயற்பாடுகள் எமது முஸ்லிம்களுக்கு மிகவும் மன வேதனையையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொது பலசேனா மற்றும் ஏனைய தீவிர அமைப்புக்களுக்கு அரசாங்கத்தின் அனுசரனையும் ஆதரவும் உண்டு என இந்தப்பிரதேச மக்கள் என்னுகின்றார்கள்.

எனவே இவ்வாறான நிலைமைக்கு எதிராக அரசாங்கமும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஒற்றுமையை சீர்குலைத்து இன நல்லினக்கத்துக்கு எதிராக செயற்படும் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது. இன ஐக்கியத்திற்கு எதிராக செயற்படும் இந்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X