2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சவூதியில் காணாமல் போயுள்ள மகளை மீட்டுத் தருமாறு தாய் வேண்டுகோள்

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற தனது மகள், கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாகியும் திரும்பி வரவே இல்லை. அவருடன் எதுவித தொடர்புகளும் இல்லை. எப்படியாவது தனது மகளை மீட்டுத் தாருங்கள் என, ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனீபா பிர்தௌஸியா (வயது 30) என்ற யுவதியின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹஸ்னா மேன்பவர் முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்ற நிலையிலேயே தனது மகளுடனான தொடர்பு அற்றுப்போயுள்ளதாக குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

எட்டு வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் ஒரு முறையேனும் நாடு திரும்பவே இல்லை என்று யுவதியன் தாயான சின்னலெப்பை ஆசியா உம்மா (வயது 70) தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த மூன்று வருடங்களாக தனது மகளிடமிருந்து பணம் கிடைப்பது நின்று விட்டது என்றும் கடந்த ஒரு வருட காலமாக அவர் காணாமல் போயிருப்பதாகவும் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 2013 ஜனவரி 16ஆம் திகதியன்று முறைப்பாடு செய்தபோது 'அடுத்த விநாடியிலிருந்தே தமது பணியகம் நடவடிக்கை எடுக்கும்' என்று பத்திரம் ஒன்று தரப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், தனது மகள் விடயமாக எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் யுவதியின் தாய் கூறியுள்ளார்.

தனது மகளின் நிலைமை தொடர்பாகக் கண்டறியுமாறும் தனது மகளை மீட்டுத் தருமாறும் கோரியும், தான் ஏறாவூர் நகர, பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவுகளுக்குச் சென்று முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பாக தாங்கள் கொழும்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு அறிவித்துள்ளாதாகவும் அங்கிருந்து பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் ஏறாவூர் நகர, பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவு உத்தியோகத்தரான எஸ்.காயத்திரி தெரிவித்தார்.

இது தொடர்பாக நாளை மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக வெளிநாட்டில் காணாமல் போயுள்ள யுவதியின் தாய் ஆசியா உம்மா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X