2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

குடை மிளகாய் அறுவடை விழா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் கீழுள்ள ஏறாவூர் மிச்நகர் மாதிரி விவசாயப் பண்ணையில் விளைவிக்கப்பட்ட குடை மிளகாய் மற்றும் செவ்வெண்டிக்காய் என்பன செவ்வாய்க்கிழமை (05) அறுவடை செய்யப்பட்டதாக ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனா ஆசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

இந்த குடை மிளகாய் மற்றும் செவ்வெண்டிக்காய்  என்பன இப்பிரதேச காலநிலையில் விளைவிக்கப்பட்டது இதுவே முதல் தடவை என்றும் அவர் மேலும் கூறினார்.

பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் செய்கை மூலம் இப்பிரதேசத்திலுள்ள ஏனைய வீட்டுத் தோட்ட விவசாயிகளும் பெரும் தோட்டச் செய்கையாளர்களும் வர்த்தக நோக்கில் இந்த மரக்கறிகளைச் செய்கையை எதிர்காலத்தில் விஸ்தரிப்பது சாத்தியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அறுவடை நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹுஸைன், விவசாய பிரதி  மாகாணப் பணிப்பாளர் ஆர்.ஹரிஹரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கற் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் உள்ளிட்ட பல விவசாய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அறுவடையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹுஸைன், 'இரசாயனங்களும் பீடைநாசினிகளும் பாவிக்காமல் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளையும் தானியங்களையும் உற்பத்தி செய்வதைத்தான் விவசாயத் திணைக்களம் ஊக்குவிக்கின்றது.

எதிர்காலத்தில் இவ்வாறான உற்பத்திகளில் வீட்டுத் தோட்டம் செய்யும் விவசாயிகளும் மற்றும் பெரு நிலப்பரப்பில் காய்கறி மற்றும் தானியங்களை விளைவிப்போரும் ஈடுபட வேண்டும் என்பதே விவசாயத் திணைக்களத்தின் அவாவாகும்.

மாறி வருகின்ற கால நிலைக்குத் தாக்குப் பிடிக்கத்தக்கதாக விவசாயிகளுக்கு சிறந்த விவசாயச் செய்கைகளை மேற்கொள்வதற்காக விவசாயத் திணைக்களம் பலவாறான முயற்சிகளை எடுத்து வருகின்றது.

ஊக்கமுள்ள விவசாயிகளை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை வழங்குவதற்கும் விவசாயத் திணைக்களம் எந்நேரமும் தயாராக இருக்கின்றது.

குறுகிய காலப் பயிர்களாக இருந்தாலும் நீண்டகாலப் பயிர்களாக இருந்தாலும் மாறிவரும் காலநிலைக்கேற்ப விவசாயிகள் தங்கள் பயிர்ச் செய்கை முறைகளை இயற்கையோடு இணைந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும்'  என்றும் அவர் வலியுறுத்தினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X