2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்த அரசை அசைக்கமுடியாது: பஷீர் சேகுதாவூத்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'இந்த அரசாங்கத்தை இனி யாரும் அசைக்க முடியாது. நாங்கள் கொஞ்சப் பேர் இருந்துகொண்டு கூச்சல் போட்டுப் பயனில்லை. நாங்கள் நினைத்தாலும் அரசைக் கவிழ்க்க முடியாது. இந்த அரசாங்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கோலோச்சும். இந்த யதார்த்தங்களை புரிந்து இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.'

இவ்வாறு உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமுல்செய்யப்படும் அபிவிருத்திப் பணிகளை தொடக்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர், ஓட்டுப்பள்ளியடியில்   திங்கட்கிழமை (1) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர்  தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஏறாவூர் கொடுத்துவைத்த ஊர். இங்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள மத்திய அரசின் அமைச்சராக நான் இருக்கின்றேன். நஸீர் அஹமட் கிழக்கு மாகாண அமைச்சராக இருக்கிறார். முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரான சுபைர் தற்போது கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளராக இருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானா தற்போது ஏறாவூர் நகரபிதாவாக உள்ளார். இப்படி எல்லா அரசியல் தலைமைத்துவங்களும் இங்கே இருப்பதால் இந்த ஊர் கொடுத்துவைத்த ஊர் என்று நான் கருதுகிறேன்.

நாங்கள் எல்லோரும் ஒத்துழைத்துச் செயற்படுகிறோம். எல்லோரும் அரசுக்கு ஆதரவான கட்சிகளோடுதான் இருக்கின்றோம். அதனாலேயே  அரசாங்கத்திடமிருந்து அதிக நிதியைக் கொண்டுவந்து சேர்ப்பித்து அபிவிருத்திகளை செய்யக்கூடியதாக இருக்கின்றது.

மாகாணசபையிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்திடமிருந்தும் பல்வேறுபட்ட அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வப்போது வெளிநாட்டு உதவிகளும் இந்த ஊருக்கு கிடைக்கின்றன.

இந்த நாட்டின் தற்போதைய துரித அபிவிருத்திக்கு முதுகெலும்பாய் இருக்கின்ற எனது நெருங்கிய நண்பர்  பஷீல் ராஜபக்ஷவும் இந்த ஊரின் அபிவிருத்திக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்கி;றார். இதற்காக இந்த ஊர் மக்கள் சார்பாக எனது இதயபூர்வமான நன்றியை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த அபிவிருத்திகளையெல்லாம் அரசு மக்களது வாக்குகளை எல்லாம் வாங்குகின்ற ஒரு முன்னேற்பாடாகச் செய்யவில்லை.  அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு தேவை. அதேபோன்று மக்களுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை. இந்த பரஸ்பர புரிந்துணர்வின் மூலமே அபிவிருத்தி, சுபீட்சம், சமாதானம் எல்லாமே கிட்டும்.

பிரிட்டிஷார் இந்த நாட்டுக்கு காலடி எடுத்துவைத்தவுடன் அவர்கள் செய்த முதல் அபிவிருத்தி வீதி அமைத்ததே.  அதற்கு பின்னர் இந்த நாட்டில் பாரியளவில் வீதிகளை நவீனமயமாக அபிவிருத்தி செய்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு.

வீதிகள், சீரான போக்குவரத்து வசதிகள் மக்களுக்கு கிடைத்தாலே வீடும் நாடும் அபிவிருத்தியடையும். அப்பொழுது முதலீடுகள் அதிகரிக்கும்.

இடைக்கிடையே இந்த அரசாங்கத்தோடு சின்னச் சின்னப் பிரச்சினைகள் எழுகின்றன. பௌத்த கடும் போக்குவாதத்தால் முஸ்லிம்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷ. பெரும்பான்மையான சிங்கள மக்களின் இதயத்திலே அவர் வாழ்கின்றார்.

சாதாரணமாக சிங்கள மக்களில் 95 சதவீதமான சிங்கள மக்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ இந்த கடும் போக்குவாத சிங்கள பௌத்த அமைப்புக்களிடமிருந்து சிறுபான்மையினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

எஸ்.எம்.எஸ்.அனுப்பிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களை உடனடியாகவே பிடித்து கூண்டுக்குள் போட முடியுமென்றால் முஸ்லிம்களுக்கெதிராக பகிரங்கமாக தெருவில் சுவரொட்களை ஒட்டும்  தீவிரவாத பௌத்த கும்பலை ஏன் கைதுசெய்ய முடியாது என்பதும் முஸ்லிம்களின் ஆன்மிக லௌகீக வழிகாட்டியான புனித அல் குர் ஆனை பகிரங்கமாவே நிந்திக்கும் கடும் போக்காளர்களை ஏன் தண்டிக்க முடியாது என்பதும்தான் முஸ்லிம்களின் ஏக்கம் கலந்த பெருமூச்சாக இருக்கின்றது.

இதனைப் புரிந்துகொண்டால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். எனவே ஜனாதிபதியவர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என நாம் நம்புகின்றோம். அவர் அதனைப் புரிந்துகொள்வதற்குத் தோதான அத்தனை நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஜனாதிபதியவர்கள் பலஸ்தீன முஸ்லிம்களின் நண்பர். ஆனால், இலங்கை முஸ்லிம்கள் தமது பெரும் ஆதரவை அவருக்கு வழங்கவில்லை.
சிங்கள பௌத்தர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவை அள்ளி வழங்கியது போல முஸ்லிம் சமூகம் மஹிந்தவைப் புரிந்து கொண்டு தமது ஆதரவை அள்ளி வழங்கவில்லை. எனவே இந்தக் குறைபாட்டை நிவர்த்திக்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. அதற்கான சந்தர்ப்பம் வருகின்றபோது நாங்கள் இந்த நாட்டின் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் மூலமே எமது அச்சத்தையும் பயத்தையும் போக்க வழியேற்படும்.' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X