2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்த சபைகளை வலுப்படுத்தும் முயற்சி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மத்தியஸ்தசபைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்தியஸ்த சபைகளில் பணியாற்றுகின்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டத்தை நீதி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பான செயலமர்வு நேற்று வியாழக்கிழமை   மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நீதி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அனுஸ்கா ஏ முனசிங்ஹ தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள மத்தியஸ்த சபைகளில் கடமையாற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் உட்பட இன்னும் பலர் இந்த அறிவூட்டல் செயலமர்வில் கலந்து கொண்டனர்.

மத்தியஸ்த சபைகளின் ஊடாக பொதுமக்களின் பிரச்சினைகளை அந்தந்த மட்டத்தில் இலகுவில் தீர்த்துவைத்து நீதிமன்றங்களின் சுமைகளை குறைக்கும் வகையில் மத்தியஸ்த சபைகளின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரிந்துரைக்கப்பட்டது.

பொதுமக்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்து வைப்பதன் மூலம் பிரதேசத்தில் சமாதானமும் சகவாழ்வும் நிலவச் செய்வதுடன், அபிவிருத்தியும் மகிழ்ச்சியும் நிலவும் என்ற கருத்தும் எல்லோராலும் ஏகோபித்து முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சந்திராணி விஸ்வலிங்கம், மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஹெட்ட யாப்பா, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் செயலாளர் வாசனா குணரெட்ன, மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர்களான பி.சனாதனசர்மா, வி.சபரிநாயகம், முஹம்மட் உசனார்;, மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் அசோக்கா ஹக்மன ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதி அமைச்சு, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X