2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமிக்காக வாதாட சட்டத்தரணிகளை நியமியுங்கள்: பஷீர்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'சிறுமிக்காக வாதாட சட்டத்தரணிகளை நியமியுங்கள். அதற்கு தேவையான என்னாலான உதவிகளை செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன்' என ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.  

'சிறுமி எம்.எஸ்.பாத்திமா சீமாவின் படுகொலையானது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது மட்டுமல்ல சமூகத்தை விழிப்படையவும் செய்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மர்ஹூமா எம்.எஸ்.பாத்திமா சீமா எனும் 9 வயது சிறுமியின் வீட்டுக்கு புதன்கிழமை(17) விஜயம் கொண்ட அமைச்சர், சிறுமியின் குடும்பத்தவருக்கு ஆறுதல் தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

'சிமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்த நபர் சட்டத்தின் பிடியிலிருந்து நிச்சயம் தப்பமுடியாது. சிறுமியின் வாழ்வை அழித்த இவரை இறைவனும் நிச்சயம் தண்டிப்பான். இவ்வாறான படுபாதகமான செயல்களை செய்தவர்கள் உலகிலேயே தண்டிக்கப்பட்ட வரலாறுகளையே நாம் பார்க்கின்றோம்' என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் உட்பட முக்கியஸ்தர்களும் சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதேவேளை, சிறுமி மர்ஹூமா எம்.எஸ்.பாத்திமா சீமவின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கும் நிகழ்வு  புதன்கிழமை(17) காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி எம்.அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி முதலாம் குறிச்சி  மீரா பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் தலைவரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவருமான எம்.ஐ.எம்.சுபைர், காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய அபிவிருத்தி சங்க செயலாளர் கரீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மர்ஹூமா பாத்திமா சீமாவின் மறுமை வாழ்வுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
இதனை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம் லெப்பை பலாஹி நடத்தி வைத்தார்.

இதில்  பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறுமியின் குடும்பத்தவர்கள், காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஆசிரியர் அமீர் அலி உட்பட ஆசிரிய  பலரும் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மேற்படி சிறுமியை கடந்த புதன்கிழமை (10) வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் எம்.ஐ.றமழான் என்ற நபர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X