2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆசிரிய இடமாற்றங்களை இல்லாமல் செய்வதென தீர்மானம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் காரணமில்லாமல் நிரந்தர மற்றும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரிய இடமாற்றங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்வதென்று கிழக்கு மாகாண கல்வி ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி ஆலோசனைக்கூட்டம் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஏ.புஸ்பகுமார தலைமையில் மேற்படி கல்வியமைச்சின் கேட்போர்கூடத்தில்  புதன்கிழமை (24) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இவ்வலயத்திலுள்ள பல்வேறு  பிரச்சினைகளையும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,  எம்.எஸ்.சுபைர் ஆகியோர் முன்வைத்த நிலையில், இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் காரணமில்லாமல் நிரந்தர மற்றும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரிய இடமாற்றங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

ஆசிரிய சமநிலையை பேணும் வகையில் தேசிய பாடசாலைகளில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை வெற்றிடமாகவுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிப்பது மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் மாணவர் தொகை 2009ஆம் ஆண்டு குறைவாக காட்டப்பட்டுள்ளது. தற்போது மாணவர் தொகை அதிகரித்துள்ளதால் அந்த மாணவர் தொகைக்கேற்ப ஆளணியை ஏற்படுத்துதல், ஆயிரம் பாடசாலை திட்டத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் ஊட்டப்பாடசாலை போன்ற பாடசாலைகளின் ஆளணியையும் உருவாக்குதல், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக்கல்வி அலுவலக கட்டட நிர்மாண வேலைகளை அடுத்த 2015ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்தல், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள அதிபர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு புதிய அதிபர்களை நியமிப்பதற்காக அதிபர் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களின் நியமனத்தை வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுதல், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்கள் ஹஜ் கடமைக்காக விசேட விடுமுறை எடுப்பதிலுள்ள சிக்கல்களை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்தல், 3 கிலோமீற்றருக்குள் எந்தவொரு புதிய பாடசாலைகளையும் ஆரம்பிக்க முடியாது, மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள சன அடர்த்தியான முஸ்லிம் பிரதேசங்களில் தளர்த்துதல் போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் எம்.எஸ்.சுபைர் உட்பட கல்வியமைச்சின் அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்விப்பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X