2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மைற்றாவின் தாக்கம் அதிகரிப்பு: தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின்; கரையோரப் பிரதேசங்களிலுள்ள தென்னை மரங்களில் 'மைற்றா' எனப்படும் பூச்சித் தாக்கம் அதிகரித்திருப்பதால் தேங்காய் உற்பத்தியில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய அலுவலக திட்டமிடல் அதிகாரி பெருமாள் உதயசந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வறட்சிக் காரணமாக இந்த மைற்றாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான கதிரவெளியிலிருந்து கல்லாறு வரை தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளன.

இத்தாக்கத்தின் காரணமாக தென்னங் குலைகளில் உள்ள குரும்பைகள் உதிர்ந்து விடுகின்றன. அதனால் தேங்காய்களின்றி வெறும் நெட்டிகளுடனேயே குலைகள் காணப்படுகின்றன.

இக்காலப்பகுதியிலே இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் தெங்குச் செய்கையாளர்கள் பாரிய இழப்பைச் சந்திக்க வேண்டிவரும். 

இத்தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறையை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.

இம்முறையினூடாக பாதிக்கப்பட்ட நான்கு மரங்களுக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு முறையை பிரயோகிப்பதன் மூலம் மைற்றா நோயை இலகுவாகக் கட்டுப்படுத்தலாம். 

அத்துடன் இம்முறையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பலதடவைகள் பாவிப்பதன் மூலம் தாக்கத்தை பலமடங்காகக் குறைக்கலாம்.
இந்த உயிரியல் முறையில் மைற்றாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான இரைகௌவியை உற்பத்தி செய்யும் ஆய்வுகூடங்களில் மட்டக்களப்பு தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை முன்னணியில் உள்ளது.

இதனூடாக உற்பத்தி செய்யப்படும் இரைகௌவி பக்கெற்களை தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை, மட்டக்களப்பு அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும்.

இவற்றை அம்பாறை, பொலநறுவை, திருகோணமலை அனுராதபுரம் போன்ற இடங்களுக்கும் மட்டக்களப்பிலிருந்து  வழங்கக் கூடியதாகவுள்ளது.

தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை, மட்டக்களபபு அலுவலகத்தில்  15 ரூபாய் செலுத்தி  ஒரு இரை கௌவி பையை கொள்வனவு செய்து பாதிக்கப்பட்ட 4 தென்னை மரங்களுக்கு பாவிக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரம் உட்பட சுமார் ஏழாயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் காணப்படுகின்றன' என பெருமாள் உதயசந்திரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X