2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தித்திட்டங்களை ஒக்டோபர் மாதத்தினுள் நிறைவுசெய்ய வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தினுள் நிறைவுசெய்து, இவற்றுக்கான நிதி அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்கு முன்னர் செலவு செய்யப்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தற்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அபிவிருத்தித்திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, வெறுமனே நிதியொதுக்கீடு செய்வது மாத்திரமல்லாமல், ஆரம்பத்திலேயே 50 சதவீதமான நிதியையும்; ஒதுக்கீடு செய்து அப்பணத்தையும் விடுவிக்கின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், இதுவரை 30 சதவீதமான நிதிக்குரிய வேலைத்திட்டங்களே முடிவடைந்துள்ளன. இதைப் பார்க்கின்றபோது மிகவும் குறைந்தளவு நிதியே இதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

சில திணைக்களங்கள் இன்னும் திட்டங்களுக்குரிய மதிப்பீட்டு அறிக்கைகளை கூட அனுப்பிவைக்கவில்லை.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஒக்டோபர் மாதத்தினுள் இந்த அபிவிருத்தித்திட்டங்கள் அனைத்தும் நிறைவுசெய்யப்பட்டு, நவம்பர் மாதத்தினுள் அதற்குரிய அனைத்து நிதிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், துரிதமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தினுள் திட்டங்களை நிறைவுசெய்து அதற்கான பணத்தை செலவு செய்ய வேண்டும். இதற்காக பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,  அதிகாரிகள் முழுக்கவனத்தையும் செலுத்தி திட்டங்களை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X