2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரி பங்காற்றுகிறது'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இன ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரி பங்காற்றி வருவதாக அக்கல்லூரித்  தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான பீடாதிபதி அஸ்ஸெய்ஹ் ஏ.எம்.அலியார் றியாதி தெரிவித்தார்.

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் செயற்பாடுகள்  தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியில் கல்வி கற்ற உலமாக்கள் பலரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல உயர் பதவிகளை வகிப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகளில் முதன்மையான அரபுக்கல்லூரியாக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரி திகழ்கின்றது.

1955ஆம் ஆண்டு காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட இந்த அரபுக்கல்லூரியானது அன்று வீடு வீடாச் சென்று அரிசி, தேங்காய் மற்றும் தனவந்தர்களின் நிதியைக் கொண்டு நடத்தப்பட்டு இன்று 397 உலமாக்களையும் 372 ஹாபிழ்களையும்; உருவாக்கி தற்போது இலங்கைக்கே முன்மாதிரியாகத் திகழும் கல்லூரியாக இந்த அரபுக்கல்லூரி உள்ளது.

இக்கல்லூரியை எமது புதிய நிர்வாகம் கையேற்ற பிற்பாடு புதிய திட்டங்களை வகுத்து செயற்பட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இங்கு உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களை உருவாக்க காரணமான இருந்த சைகுல் பலாஹ் அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத்தின்; அயராத முயற்சியாலும் தியாகத்தினாலும்; இந்த கல்லூரி மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது.  அதனை மேலும் வளர்ச்சியடையச் செய்து தேசிய ரீதியில் சிறப்பாகத் திகழும் கல்லூரிகளுக்கு ஒப்பாக இக்கல்லூரியை மாற்ற வேண்டிய தேவையை எமது நிர்வாகம் உணர்ந்துள்ளது.
இது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில்,  ஊடகவியலாளர்களை அழைத்து  இதனை தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்தோம்.

இந்தக் கல்லூரியில் தற்போதுள்ள பாடத்திட்டத்துடன் இன்னும் சில பாடசங்களை சேர்த்து இதை மேலும் வளரச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதன் முதற்கட்டமாக மாணவர்களின் வசதி கருதி கடற்கரை வீதியில் அமைந்துள்ள எமது சொந்தக்காணியில் 300 மாணவர்கள் தங்கக்கூடிய 3 மாடிகளைக்கொண்ட புதிய கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதுடன் அதில் 14 வகுப்பறைகள், வாசிகசாலை, விடுதி வசதி, வாகனத்தரிப்பிடம், சிற்றுண்டிச்சாலை,  விளையாட்டுமைதானம் போன்ற வசதிகள் கொண்ட கட்டடமாக நிர்மாணிக்க உத்தேசித்துள்ளோம். இதற்கு 12 கோடியே 70 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

எமது பிராந்தியத்தின் கண்ணாகத்திகழும் இந்தக்கல்லூரியானது 7 வருட கற்கைநெறியில் 2 வருடங்கள் மொழியினைக்கற்க வசதி செய்து கொடுக்கவுள்ளோம்.

அதாவது ஆங்கிலம், சிங்களம், அரபு, தமிழ் ஆகிய 4 மொழிகளைக் கற்க தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக்கொண்டு பயிற்றுவிக்கவுள்ளோம். அதேபோல் தகவல் தொழில்நுட்பம், கணினி இலத்திரனியல் போன்ற துறைகளிலும் எமது மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளோம்
இந்த அரபுக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாகவுள்ளது.

ஐமியத்துல் பலாஹ் அரபிக்கல்லூரியினை ஓர் எடுத்துக்காட்டான போட்டி போடக்கூடிய எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய  கல்லூரியாக மாற்றவேண்டிய தேவை காணப்படுகிறது.

எமது உலமாக்கள் இங்கிருந்து வெளியாகும்போது பல துறைகளிலும்  பட்டதாரிகளாகவும் டிப்ளோமா முடித்தவர்களாகவும் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மிளிரவேண்டும். இதுவே எமதுஎமது அபிலாசையாகும்.
இந்த அடிப்படையிலேயே புதிய கட்டடத்தையும் நிர்மாணிக்கவுள்ளோம். இதற்கு அனைவரினது பங்களிப்பு அவசியாகும்' என்றார்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X